கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் வணங்கவேண்டிய எண்கண் முருகன்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் வணங்கவேண்டிய எண்கண் முருகன்!

பிரணவ மந்திரத்திற்கு உட்பொருள் என்ன என்று முருகப் பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டி தொழிலையும் தானே ஏற்றார். சிறை விடுத்தும் பிரம்மாவிடம் சிருஷ்டி தொழிலைத் தராது தானே செய்தார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானைத் தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறி தனது படைத்தல் தொழிலைத் திரும்பப் பெற்றுத்தரப் பிரம்மா வேண்டுகிறார்.

முருகனோ பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலைச் செய்வது முறையல்ல என்று கூற, சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலை தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்குப் பிரணவ உபதேசம் செய்து தென்முக கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் பூஜித்தமையால் இத்தலம் எண்கண் என்றும், பிரம்மபுரம் என்றும் வழங்கப்பட்டது


திருவாரூர் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் தென்புற மதிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அது, கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரம சோழனின் காலத்தியது. இங்கண் நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன் என்பவருக்கு திருவாரூரில் ஒரு மாளிகை கட்டிக்கொடுத்த விவரங்களை அந்தக் கல்வெட்டு சொல்கிறது. மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவிற்காகத் தனது மகனை தேர்காலில் இடற செய்ய உத்தரவிட்டபோது, அதை மீறமுடியாமல் தன்னை தானே வாளால் மாய்த்துக்கொண்ட அமைச்சர் உபயகுலாமலனின் வம்சா வழி வந்தவர்தான் அந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன்.
இதில் சொல்லப்படும் இங்கண் நாடு தான் தற்போதைய எண்கண். இப்படி மருவி வந்தது தான் எண்கண் எனும் பெயர். தற்போது பல பெயர்க் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவே வரலாற்றுப் பெயர்.

மூலவர் - பிரம்மபுரீஸ்வரர், இறைவி - பெரியநாயகி இது ஒரு சிவ தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்.
சிக்கலில் சக்திவேலை பெற்று சிங்கமுகன், பானுகோபனை அழித்து, பின்னர் சூரபத்மனை இருகூறாக பிளந்து கொடியாகவும், சேவலாகவும் கொண்டு இந்திரனுக்கு அவனது நகரான அமராவதியை கொடுத்தபின் இந்த என்கண்ணில் வந்தமர்ந்தார். இதனை "இந்திரன் பதம் பெறு அண்டர்தம் பயம் கடிந்த பின்பு என்கண் அங்கு வந்து அமர்ந்திருந்த பெருமானே'என அருணகிரிநாதர் பாடுகிறார்.

இத்தலத்து முருகப்பெருமான் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால் முருகன் சன்னதியை சபை என்றே அழைப்பர் முருகப்பெருமான் தென்முகமாய் காட்சியளிப்பதால் அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய அரும் பேறுகளை அடியாருக்கு அளிப்பவர்.

சண்முகார்ச்சனை: கண்பார்வை குறைந்தவர்கள் பிரதி தமிழ் மாதம் விசாக நட்சத்திர நாளில் தொடர்ந்து 12 மாதங்கள் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை செய்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு வரக் கண்பார்வை முழு குணம் பெறுவது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க அற்புதம் ஆகும்.

மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாகக் காட்சி அளிக்கின்றனர்.

ஆறுமுகங்கள்: முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிரு கரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள் தான் தாங்கியிருக்கிறது.

இப்படிப்பட்ட அழகிய சிலையை வடித்த சிற்பி இதற்கு முன்னம் சிக்கலில் ஆறுமுகன் சிலை வடித்தார், அதன் அழகிய வடிவினை பார்த்த முத்தரச சோழன் அந்த சிற்பியின் வலக்கை கட்டைவிரலைத் தானமாகப் பெறுகிறான், கட்டைவிரலை இழந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கிறார், கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் பறிக்க, வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் அடர்ந்த வனமாகிய சமீவனம் என்ற இந்த இடத்தில் அதே அழகுடன் வடிவமைக்கிறார். ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிட்டு சிற்பியின் கண்களில் படுகிறது, முருகன் அருளால் சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது.

எண்ணமே கண்ணாக இருந்து சிலை வடித்ததால் எண்கண் எனப் பெயர் வந்தது. ஆறுமுகனின் அத்தனை காதுகளில் தோடு போடும் துளைகளும் உள்ளன. முருகனின் பின்புறம் ஓர் மந்திர தகடு பொருத்தப்பட்டுள்ளது.
தைப்பூசம் - பிரம்மோற்சவம் - 14 நாட்கள் விழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால் சிம்ம வர்ம மன்னனுக்குச் சிங்க முகம் கிடைக்கிறது. சிம்ம வர்ம மன்னன் தினசரி விருத்த காவிரியில் கிளையான வெட்டாற்றில் நீராடி எண்கண் வேலவனை தரிசித்துவர சிம்ம வர்மனுக்குத் தைப்பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிய சுபதினத்தில் முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கார்த்திகை, ஐப்பசி - கந்த சஷ்டி - 8 நாள் திருவிழா, பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேஷம். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.
கோயில் கிழக்கு நோக்கியது என்றாலும், தென்புறம் ஒரு கோபுர வாயில் உள்ளது. இறைவன் எதிரில் ஒரு கொடிமரமும், முருகன் எதிரில் ஒரு கொடிமரமும் உள்ளது. இறைவன் பிரம்மபுரீஸ்வரர், இறைவி பெரியநாயகி.

கருவறை கோட்டங்களில் தென்முகனும் பின்புறம் அர்த்தநாரீஸ்வரரும் அவரின் எதிரில் ஐயப்பனும் உள்ளனர். வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.

 தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயமும், வடமேற்கில் பாலசுப்ரமணியர் சிற்றாலயமும் உள்ளது. வடகிழக்கில் காசி விஸ்வநாதரும், அண்ணாமலையாரும், நவக்கிரங்களும், பைரவர், லிங்க பாணம் ஒன்றும் உள்ளது. கருவறை வடக்கில் நீண்ட மண்டபம் யாக சாலையாக பயன்படுகிறது. இந்த ஷேத்திரம் துவாதசாந்த ஷேத்திரம் என சொல்லப்படுகிறது.

கிழக்கில் கோபுர வாயிலின் முன்னர் பெரிய வன்னி மரத்தின் கீழ் விநாயகர் சன்னதி உள்ளது.
காலை 6 மணி முதல் 12மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.No comments:

Post a Comment