பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 19, 2019

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.


இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 771 ஆகும். இதில் மறுகூட்டலுக்கு 920 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


இதைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 1,898 ஆகும்.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.


மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் பதிந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் சிறப்புத் துணைப் பொதுத்தேர்வுக்கான பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.


நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்:

கடந்த ஜூனில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புப் பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஆக.21-ஆம் தேதி புதன்கிழமை முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஆக.27-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment