அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 8, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா, தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? என்ற விபரத்தை பள்ளி கல்வித்துறை திடீரென்று சேகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மதிய உணவு, இலவச சீருடை போன்ற நல உதவிகளை அரசு  வழங்கி வருகிறது. குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேராமல் இருக்க பள்ளி கல்வித்துறை சார்பில் அங்கன்வாடிகளை மையமாக கொண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆசிரியர்கள், ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த ஐகோர்ட், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது. ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது. அரசு பள்ளியில் சேர்க்காமல் பெரும்பாலானோர் ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தது.


இந்தநிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு, கல்வி தகவல் மேலாண்மை முறை, இணையதளத்தில் ஆசிரியர் விபரங்கள் பதிவேற்றம் போன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளார்களா, தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளார்களா என்பதை கணக்கிடும் பணியை பள்ளி கல்வித்துறை திடீரென்று மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அதன்படி கல்வி தகவல் மேலாண்மை முறை (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்  தங்கள் குழந்தைகள் சார்ந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த இணையதளத்தில் ஆசிரியர் குழந்தைகள் பகுதி என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் குழந்தைகள் யாராவது அரசு பள்ளியில் படிக்கின்றனரா என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இதில் ஆம், இல்லை மற்றும் பொருந்தாது என்ற விபரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆசிரியர்கள் இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.


அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் படிக்கின்ற தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இஎம்ஐஎஸ் எண்ணையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் இது தொடர்பாக அடிக்கடி கேள்விகள் எழுப்புவதால் இது பற்றிய விபரங்களை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவு ஏதும் அரசு தரப்பில் வெளியாக வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது

No comments:

Post a Comment