அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ திரை நட்சத்திரங்களே... இதைச் செய்வீர்களா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 27, 2019

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ திரை நட்சத்திரங்களே... இதைச் செய்வீர்களா?

அரசு பள்ளிகளில் தரம் குறைந்து விட்டது என்று சொல்லி, அனைத்து தரப்பு மக்களும், தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுத்துச் சென்று, லட்சம் லட்சமாக பணத்தை செலவழித்து, தங்கள் பிள்ளைகளை கல்வி பயில வைக்கின்றனர்.
இது ஒரு மாயை!

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசும், ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தபடியே உள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும், தங்கள் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.



அப்படியெனில், அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் அவல நிலை ஏன் ஏற்படுகிறதுமாணவர் சேர்க்கை குறைகிறது என்பது போன்ற கேள்விகள், மனதில் தோன்றலாம். எந்த ஒரு நபருக்கும், தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது, முதலில் தெரிவது பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி தான்.

 இது, மனதைக் கவரும்படி இருந்து விட்டாலே போதும்; திருப்தி ஏற்பட்டு விடும். இந்த விஷயத்தில் தான், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளிடம் தோற்றுப் போகின்றன. காரணம், பள்ளி அமைந்துள்ள இடத்தின் பாதுகாப்பு குறைபாடு தான்.

பாதுகாப்பு குறைபாட்டிற்கும், பள்ளி கட்டமைப்பிற்கும், மாணவர் சேர்க்கை குறைவதற்கும், என்ன சம்மந்தம் என்ற கேள்வி எழுகிறதா?
அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் மூலம் பராமரிப்பு செய்தாலும், பெரும்பாலான பள்ளிகளை, சமூக விரோதிகள், இரவு நேர விடுதிகளைப் போல பயன்படுத்துகின்றனர்



சமூக விரோத செயல்கள் அனைத்தும் இரவு நேரங்களில், அரசுப் பள்ளிகளில் அரங்கேறுகின்றன.


 இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், பள்ளியில் கால் வைக்க முடியாது. மது அருந்திய பாட்டில்களை உடைத்து போட்டிருப்பது; போதை தலைக்கேறி, பள்ளி திண்ணையிலேயே வாந்தி எடுத்திருப்பது; சிறுநீர் கழிப்பது; பள்ளி சுவரில் ஆபாச படங்களையும், சொற்களையும் கிறுக்குவது;


 பள்ளி கழிப்பறையை அசுத்தப்படுத்துவது; குடிநீர் தொட்டியையும் குழாய்களையும் உடைத்து போடுவது என, எத்தனையோ அவலங்கள் நடக்கின்றன.

இதையெல்லாம், ஆசிரியர்களும், மாணவர்களும் தான் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதற்கான செலவினங்கள் அனைத்தும், தலைமை ஆசிரியர் தலையில் தான் விழும்.இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இச்செயல்களைப் பார்க்கும் மாணவர்களின் மனதில், தேவையற்ற சஞ்சலங்கள், பிஞ்சு பருவத்திலேயே விதைக்கப்படுகின்றன


.மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதெல்லாம், இன்று மதிக்கப்படாத, மறக்கடிக்கப்பட்ட பழமொழி ஆகிவிட்டன. யாரும், யார் வார்த்தைகளையும் மதிப்பதில்லை. யாருக்கும் கட்டுப்படுவதில்லை என்ற நிலையில் தான், பெரும்பாலானோர் உள்ளனர்.

இன்றையச் சூழலில், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள பொதுமக்கள். தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பேச்சை மட்டும் வேத வாக்காக நினைக்கின்றனர். அதனால் தான், அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கிறது.


முன்பு, எம்.ஜி.ஆர்., தன் திரைப்படங்களில் மது, புகை போன்ற, உடல்நலத்திற்கு தீங்கான பழக்கங்களை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்திருப்பார். அதனால், அவரது ரசிகர்களிடம் மறைமுகமாக பல நல்ல பழக்கங்கள் தொடர்ந்தன.

இன்று, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் பல இருந்தாலும், திரைப்படங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் மீதான ஈர்ப்பு சற்றும் குறையவில்லை.


 இதை, சமூக அக்கறை கொண்ட, திரை நட்சத்திரங்கள் உணர்ந்து செயல்பட்டால், சமூகத்தில் உங்களால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
திரை நட்சத்திரங்களே...
உங்கள் ரசிகர் மன்றங்களையும், ரசிகர்களையும் அரசுப் பள்ளிகளின் மீது கவனம் செலுத்த வையுங்கள். சமூக விரோத செயல்கள் பள்ளிகளில் நடைபெறாமல் தடுப்பது;


பள்ளி சொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பது; பள்ளி சுவரில் ஆபாச படங்கள், வார்த்தைகள் போன்றவற்றை கிறுக்காமல் பார்த்துக் கொள்வது: மரக் கன்றுகளை நட்டு பாதுகாப்பது என மாற்றிக் காட்டச் செய்யுங்கள்.

மேலும், அங்குள்ள மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை செலுத்தி, மாலை நேர சிறப்பு வகுப்பு எடுப்பது.

உங்களின் பிறந்த நாள், புதுப்பட, 'ரீலிஸ்' சமயங்களில் பேனர், மைக் செட் போன்றவற்றிற்காக செலவழிக்கும் பணத்தில், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிப்பதன் மூலம், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட வைத்தால், மாணவர்கள் மட்டுமின்றி, உங்களது, ரசிகர்களது வாழ்விலும் மாறுதல் ஏற்படும்.



சமுதாயம் பற்றிய அக்கறையும், பொறுப்புணர்வும், தெளிந்த சிந்தனையும் உருவாகும்.

தனியார் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம், அவர்களது பெற்றோரின் கூடுதல் கவனிப்பு மற்றும், 'டியூஷன்' சென்டர் மூலமாக பட்டை தீட்டப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியோ, வகுப்பறையோடு நின்று விடுவதாலும், வீட்டுச் சூழல் காரணமாகவும் கல்வியில் பின்தங்குகின்றனர்



.உங்கள் ரசிகர்களின், மேற்கொண்ட ஊக்குவிப்புகள் மூலமும், நிச்சயம் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் புரட்சியை ஏற்படுத்த முடியும். மாணவர்களிடம் புரிதல் திறன் அதிகரிக்கும் போது, ஆசிரியர்களின் கற்பிக்கும் வேகமும் அதிகரிக்கும்.


சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் போது, ஆசிரியர்களுக்கும் உற்சாகம் பிறக்கும்.



அப்போது, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.இதற்காக, நீங்கள் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களது பொன்னான நேரத்தில், சில மணித்துளிகளை செலவிட்டு, உங்கள் ரசிகப் பெருமக்களை சமாதானப்படுத்தினாலே போதுமானது.


எனவே, உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் வேண்டுகோள் விடுத்தும், அறிவுரை வழங்கியும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.திரை நட்சத்திரங்களே... இதைச் செய்வீர்களா?



எஸ்.ஆர்.சாந்தி

சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment