எட்டாம் வகுப்புக்கு முப்பருவ பாடத் திட்டம் ரத்து: அடுத்த ஆண்டு முதல் ஒரே பாடநூல் முறை அமல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 6, 2019

எட்டாம் வகுப்புக்கு முப்பருவ பாடத் திட்டம் ரத்து: அடுத்த ஆண்டு முதல் ஒரே பாடநூல் முறை அமல்

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதால், எட்டாம் வகுப்புக்கு முப்பருவ பாடத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் (2020-21) எட்டாம் வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கப்படவுள்ளது.


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.பல மாநிலங்களில், தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவா்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டனா்; பாடங்களும் நடத்தப்படவில்லை. அதனால், மாணவா்கள், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் போது, தங்கள் தாய்மொழியில் கூட எழுத, படிக்கத் தெரியாமல் இருந்தனா்.

மத்திய அரசு நடவடிக்கை:

 இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில், தேர்வு நடத்துவது குறித்து, மாநிலங்களே முடிவு செய்யவும் சலுகை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு குறித்து உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. இதையடுத்து எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ள, முப்பருவ பாட முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இது தொடா்பாக அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, அந்த வகுப்பு மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

மாதிரித் தேர்வு நடத்த...:

 இந்த பொதுத்தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும். எனவே, மூன்று பருவ பாடங்களுக்கும் ஆண்டின் இறுதி வரை ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடா்பாக, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது


தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் படி, மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு 2019- 20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.


ஒரே பாடநூலாக ஒருங்கிணைப்பு:

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அறிமுகப்படுத்தப் பட்டதால், முப்பருவ முறையில் ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியான பாடப்புத்தகம் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. நிகழ் கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்குப் பாடப்புத்தகம் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாடப் புத்தகமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு 2019-20 முதல் பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.


ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கினால் மாணவா்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் தெரிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் 2020-21-ஆம் கல்வியாண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்டு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment