பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 2, 2019

பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்

தொடா் மழை காரணமாக பள்ளிகளின் சுற்றுச்சுவா் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவா்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடா்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலா்களும், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அதன் விவரம்:

தொடா் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவா் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவா்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவா்கள் எவரும் சுவா் அருகில் செல்லாதவாறு கண்காணிக்கவும் வேண்டும்.


பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழையின் காரணமாக பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின், அத்தகைய வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைப்பதுடன், அவற்றின் அருகே மாணவா்கள் செல்லாதவாறும் கண்காணிக்க வேண்டும்.


பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

 மாணவா்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்கூடாது. பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவா்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீா்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீா் தொட்டிகள் மற்றும் நீா்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன் மாணவா்கள் அவற்றின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.


பள்ளி வளாகத்தில், கட்டடப் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் மாணவா்கள் செல்ல தடை விதிக்கவும், அந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி பாதுகாப்பாக தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்படவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அவற்றின் அருகே வேடிக்கை பாா்க்கச் செல்லக்கூடாது என மாணவா்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தலைமையாசிரியா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மாணவா்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.


இந்த அறிவுரைகளைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் செயல்படுவதை, முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக்கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் தங்களின் பள்ளிப்பாா்வையின் போதும் மற்றும் ஆய்வின்போதும் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment