இது முதல் தடவையல்ல; தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு!' -அதிர்ச்சிப் பின்னணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

இது முதல் தடவையல்ல; தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு!' -அதிர்ச்சிப் பின்னணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


கடந்த செப்டம்பர் மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.



சமீபத்தில் தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் ஆகியவை அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசைப் பட்டியலில் அதிகமாக இடம்பிடித்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சிக்குப் புகார்கள் குவிந்தன.அதன்பேரில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் குரூப் 4 தேர்வு மட்டுமல்லாமல் குரூப் 2 தேர்விலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் தரவரிசைப் பட்டியலில் அதிக இடங்களைப் பிடித்திருப்பது தெரியவந்தது.


 இதுதொடர்பாக விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்பேரில் சந்தேகத்துக்குரிய தேர்வு மையங்களில் இன்று விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் சிலர், ``ராமேஸ்வரம் தேர்வு மையத்திலும் கீழக்கரை தேர்வு மையத்திலும் குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.


முதல்கட்டமாக இந்த இரண்டு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் எத்தனை பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தைச் சேகரித்துள்ளோம். பின்னர், தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் எத்தனை பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுத்துவருகிறோம்.

அதன்பிறகு இந்த இரண்டு தேர்வு மையங்களில் தேர்வை நடத்திய அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரை விசாரணை நடத்தப்படவுள்ளது.


 இதனால் தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றது உறுதி செய்யப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் நம்மிடம்,``2017-18- ம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்விலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களிலிருந்து தேர்வு எழுதியவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.


 அதனால், குரூப் 4 தேர்வில் மட்டுமல்லாமல் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தேர்வு மையத்தின் எண் 1606-ல் தொடங்கும்.



அதுபோல கீழ்க்கரை தேர்வு மையத்தின் எண் 1608. இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்கள்தான் தரவரிசைப் பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ளன. இதுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த காலகட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்களின் நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களைப் பணிநீக்கம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதைப்போல குரூப் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸாரிடம் சிக்கிய புரோக்கர் ஒருவர் ரயிலில் அழைத்துச் செல்லும்போது தப்பினார்.

.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்


அப்போது தலைமறைவானவரை இதுவரை போலீஸார் பிடிக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியவர்களில் சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அந்தப் புகாரும் கிடப்பில் போடப்பட்டுள்ளது." என்றனர்.

முறைகேடுகள் நடப்பது எப்படி?

``டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடு நடக்கக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம். உயர் அதிகாரி ஒருவரைத் தவிர, வினாத்தாள்கள் அச்சடிக்கும் இடம் குறித்த தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்படும்.


ஆனால், சில கறுப்பு ஆடுகள் மூலம் புரோக்கர்கள் மோப்பம் பிடித்துவிடுகின்றனர். பின்னர், அந்த விடைத்தாள்களை விலைக்கு வாங்கி முறைகேடு செய்வது ஒரு வகை.


அடுத்து, தேர்வு எழுதும் மையங்களில் நடக்கும் முறைகேடு. அதாவது, தேர்வு எழுதும் மையங்களில் கண்காணிப்பாளராக இருப்பவர்கள் மூலம் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. கடந்தகால தேர்வுகளில் விடைத்தாள்களில் குறியீடு வரையப்பட்டிருக்கும்.


அந்த விடைத்தாள்களைத் திருத்தும்போது டி.என்.பி.எஸ்.சி-யில் உள்ள கறுப்பு ஆடுகள் சிலர், கவனிப்புக்கு ஏற்ப மதிப்பெண்ணை மாற்றிவிடுவார்கள்.


 இவையெல்லாம் கடந்த தேர்வுகளில் நடந்த முறைகேடுகள். இப்போதெல்லாம் தேர்வுக்கு முன் சில பயிற்சி மையங்களில் விடைத்தாள்கள் வாட்ஸ்அப்பில் பரப்புகின்றனர்.


எவ்வளவுதான் தேர்வுகளை கவனமாக நடத்தினாலும் கறுப்பு ஆடுகளால் முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன" என்கின்றனர் டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில்(விகடன் செய்தி)

No comments:

Post a Comment