கடுமையான சட்டங்கள் மக்களைத் துன்புறுத்த அல்ல;முதல்வர் பழனிசாமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

கடுமையான சட்டங்கள் மக்களைத் துன்புறுத்த அல்ல;முதல்வர் பழனிசாமி


கடுமையான சட்டங்கள் என்பது மக்களைத் துன்புறுத்த அல்ல என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்மட்ட அதிகாரிகளுடன்  (மார்ச் 30) முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.


அதன் பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தமிழகத்தில் குறைவான நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறதா?

அவையெல்லாம் தவறான செய்திகள். அறிகுறிகள் இருந்தால்தானே பரிசோதனை செய்ய முடியும். யாருக்கு அறிகுறிகள் உள்ளதோ அவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு சொல்லியிருக்கிறது

1,981 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 14 ஆய்வு மையங்கள் உள்ளன. மேலும், 3 பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதுவும் வந்துவிடும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வீட்டு வாடகையைச் செலுத்த முடியாத நிலையில் பலரும் உள்ளனரே?


இது இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்சினை. தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. இதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக தீர்த்து வருகிறோம். இதனையும் கவனத்தில் எடுத்து வருகிறோம்.

144 தடை உத்தரவை மக்கள் கடுமையாகப் பின்பற்றுகிறார்களா? பல இடங்களில் மீறப்படுகிறதா?

தமிழகத்தில் இறப்பு மற்றும் திருமணங்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. எல்லாவற்றுக்கும் கூட்டமாகச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் அந்த வீட்டுக்கு துக்க காரியங்களுக்குச் செல்லலாம். திருமண ஏற்பாடுகள் ஏற்கெனவே செய்திருந்தால், அந்த திருமணத்திற்குச் செல்லலாம். யாராவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தால் செல்லலாம்.

மாவட்ட எல்லையைக் கடக்கும்போது வட்டாட்சியரிடம் அனுமதி வாங்கிச் செல்லலாம். 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கின்றது. இது ஒரு தொற்று நோய், கடுமையான நோய். விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோய்த் தடுப்பே தனிமை மட்டும்தான்.

தமிழகத்தில் இந்த தொற்று 2-ம் நிலையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே கட்டுப்படுத்திவிட்டால், நமக்கு எந்தப் பிரச்சினையும் எழாது. மக்கள் இதற்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடுமையான சட்டங்கள் என்பது மக்களைத் துன்புறுத்த அல்ல. மக்களுக்கு பய உணர்வை ஏற்படுத்துவதற்குத்தான். அதனை அனைவரும் மதிக்க வேண்டும். நமது மாநிலம் மக்கள்தொகை நிறைந்தது.


இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தித்தது இல்லை. இது சவாலான நேரம். படிப்படியாகத்தான் மக்களைக் கொண்டு வர முடியும். நிவாரண உதவிகளை எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாரே?

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தினாலும் இதைத்தான் சொல்லப் போகிறோம். இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வந்துகொண்டிருக்கிற்து. நிவாரணப் பொருட்களையும் பொதுமக்கள் வழங்குகின்றனர்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

No comments:

Post a Comment