டிக்டாக் விடியோ பார்த்து கரோனாவுக்கு கைவைத்தியம் செய்த 10 பேர் மருத்துவமனையில் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 9, 2020

டிக்டாக் விடியோ பார்த்து கரோனாவுக்கு கைவைத்தியம் செய்த 10 பேர் மருத்துவமனையில்

டிக்-டாக் விடியோவில் கரோனா தொற்றுக்கு கைவைத்தியம் இருப்பதாக விஷமிகள் போட்ட விடியோவைப் பார்த்து கசாயம் குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனாவைப் பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்தான் சித்தூர் மாவட்டத்தை அடுத்த சிறிய கிராமமான அலப்பள்ளியில், ஊமத்தங் காயை அரைத்து அதில் கசாயம் வைத்துக் குடித்தால் கரோனா பாதிக்காது என்று விஷமிகள் வெளியிட்ட நகைச்சுவை விடியோவைப் பார்த்த இரண்டு குடும்பத்தினர், அதைப் பின்பற்றி கசாயம் வைத்துக் குடித்துள்ளனர்.


சுமார் 10 பேர் கொண்ட இரண்டு குடும்பத்தினர், டிக் டாக்கில் வந்த விடியோவைப் பார்த்து ஊமத்தங்காயை பறித்து வந்து கசாயம் வைத்துக் குடித்துள்ளனர். உடனே அனைவரும் மயங்கி விழ, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போதுதான் அவர்கள் கரோனா வரக்கூடாது என்று நினைத்து ஊமத்தங்காய் சாறு குடித்ததாகக் கூறியுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து சித்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை அதிகாரி கூறுகையில், இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.


 கரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பது ஒன்றே கரோனா தொற்றில் இருந்து காக்க உதவும். சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பவும் வேண்டாம், பிறருக்கு பகிரவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment