எவ்வளவு நேரம் தான் டி.வி. பார்ப்பது? வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டும் ஆண்கள் - மனைவியின் அருமை புரிவதாக நெகிழ்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 11, 2020

எவ்வளவு நேரம் தான் டி.வி. பார்ப்பது? வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டும் ஆண்கள் - மனைவியின் அருமை புரிவதாக நெகிழ்ச்சி

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி டி.வி. பார்த்து பொழுதை கழித்து வந்த ஆண்கள், தற்போது வீட்டு வேலைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ‘இப்போதுதான் உன் அருமை புரிகிறது’, என தங்கள் மனைவியை மெச்சியும் வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த மாத இறுதியில் இருந்தே பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளன. அதன்படி ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகிறார்கள்.


இதில் பெண்களை காட்டிலும் ஆண்களின் நிலை தான் பரிதாபம். பெண்கள் வீட்டு வேலைகளை பொறுப்புடன் பார்ப்பதில் திறமைசாலிகள். பொறுமைசாலிகளும் கூட. ஆனால் எப்போதும் காலில் சக்கரம் கட்டியதுபோல பரபரப்பாக காணப்படும் ஆண்கள் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் பெட்டி பாம்பாக அடங்கி கிடக்கிறார்கள்.

எப்போதுமே அலுவலகத்தில் பாதி நேரம், வீட்டில் மீதி நேரம் என கழித்து வந்த ஆண்களுக்கு இப்போது வீடே கதியென நிலை மாறிவிட்டது. காலையிலேயே அலுவலக வேலைகளை வேகமாக முடித்துவிட்டு டி.வி. முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். டி.வி. நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் ஓரளவு கை கொடுப்பதால், சில மணி நேரங்களை எளிதில் கடத்தி விடுகிறார்கள். அவ்வப்போது பிள்ளைகளுடன் விளையாடியும், ஆடிப்பாடியும் பொழுதை கழித்தும் வருகிறார்கள்.

இப்போது வீட்டிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரிய சங்கடமாக ஆண்களுக்கு அமைந்துவிட்டது. இதனால் வீட்டு வேலைகளில் “மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கலாமே” என்ற எண்ணத்துக்கு ஆண்கள் வந்துவிட்டனர். இதனால் ஏராளமான வீடுகளில் தற்போது வீட்டு வேலைகளில் ஆண்கள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

கைக்குழந்தை உள்ள வீடுகளில் ஆண்கள் குழந்தைகளை அவ்வளவு அக்கறையாக பார்த்து கொள்கிறார்கள். குழந்தைகளை குளிப்பாட்டுவது, உணவூட்டுவதிலும் ஆண்கள் தாமாக முன்வந்து ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள வீட்டில் தற்போது தந்தையரும் பிள்ளைகளுக்கு பாடங்களை சொல்லி கொடுக்கிறார்கள். சிலர் ஓவியம் வரையவும் கற்றுத்தருகிறார்கள்.

கடைகளுக்கு செல்வது, துணிகளை கொடியில் காயவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளிலும் ஆண்கள் ஓரளவு ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது. அதேவேளை தற்போது ஓய்வு நேரம் அதிகம் என்பதால் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆண்கள் மகிழ்ச்சியாகவும், மனம் விட்டும் பேசவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

குடும்ப ஒற்றுமை

பல வீடுகளில் சமையற்கட்டிலும் ஆண்கள் காலடி எடுத்து வைத்துவிட்டனர். வெங்காயம், தக்காளி நறுக்குதலில் தொடங்கி, வானலியில் காய்கறி வதக்குவது வரை ஆண்கள் ஆர்வத்துடன் வேலை செய்வதை பார்க்க முடிகிறது. ‘நீ சொல்லிக்கொடு... இன்னைக்கு ஒரு நாள் நான் சாம்பார் வைக்கிறேன், ரசம் வைக்கிறேன்‘, என்று கேட்டு மனைவி கூறும் சமையல் குறிப்புகளின்படி ஆண்களும் உணவு சமைத்து அசத்துகிறார்கள்.

‘எப்படி இந்த வீட்டுக்குள்ளேயே நீ அடஞ்சு இருக்கிறாயோ... இத்தனை வேலைகளையும் செய்துகிட்டு உன்னால் சகஜமாக எப்படி இருக்கமுடிகிறது? உன் அருமை இப்போது தான் புரிகிறது’, என்று மனைவிமார்களை ஆண்கள் மெச்சுவதையும் பார்க்க முடிகிறது. உலகம் முழுவதும் அச்சத்தை உண்டு பண்ணினாலும் குடும்ப ஒற்றுமைக்கும் கொரோனா வைரஸ் மறைமுகமாக உதவி புரிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

No comments:

Post a Comment