10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 15, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு வாபஸ்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா *



மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்?- நீதிபதிகள்

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 718 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட சிறுவர்களை கரோனா நோய்த்தொற்று எளிதில் தாக்கக்கூடியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.


இந்தத் தேர்வின் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினமான ஒன்றாகும். மேலும், பல மாணவர்கள் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து தேர்வெழுத வரக்கூடும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியமானது என்றால், தற்போதுள்ள அசாதாரண சூழலில் இத்தேர்வை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கரோனா நோய்த்தொற்று முற்றிலுமாக இல்லாத நிலையில் தேர்வை நடத்த வேண்டும். அதுவரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்வை ஒத்திவைக்கவும், தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே நடப்புக் கல்வியாண்டு தள்ளி போய்விட்டது. மேலும், இந்த வழக்கை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரோ, அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினரோ நீதிமன்றத்தை நாடவில்லை. மேலும் மாணவர் தரப்பிலோ பள்ளிகளின்  தரப்பிலோ யாரும் வழக்கு தொடரவில்லை. தமிழக அரசின் உத்தரவால் பாதிக்கப்படாத வழக்கறிஞர் தொடர்ந்துள்ள இந்த பொது நல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.


இதனையடுத்து, மனுதாரர் மனுவைத் திரும்பபெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment