இந்த மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

இந்த மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்க உள்ளது. பிளஸ் ஒன் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ கடைசி தேர்வில் பங்கேற்காத 36,089 மாணவர்களுக்கான மறுதேர்வு ஆகியவையும் நடத்தப்பட உள்ளன.


இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும். பிளஸ் டூ மறுதேர்வுக்கு மட்டும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பயன்படுத்துவதற்காக 46 லட்சத்து 37 ஆயிரம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.

தேர்வு மையங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தால், அதற்கு மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

.பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். விடுதியில் தங்கி பயில்வோருக்கு தேர்வு முடியும் வரை விடுதி திறக்கப்பட்டிருக்கும்.


சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்றுவர போதிய அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும், ஆன்லைனில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வழிசெய்யப்படும். தலைமை ஆசிரியர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment