அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59-ஆக நீட்டிப்பு: ரகசியம் என்ன? - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 8, 2020

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59-ஆக நீட்டிப்பு: ரகசியம் என்ன?

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி நேற்று அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், ஓய்வுவயது நீட்டிப்பு என்பதன் பின்னணி என்பது குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 14 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 4 லட்சம் பேரும், ஆக சுமார் 18 லட்சம் பேர் அரசு சம்பளம் மற்றும் பணப் பலன்களைப் பெற்று வருகின்றனர். 


அரசு ஊழியர்களுக்கு படி, சம்பளம் வழங்க ரூ. 64 ஆயிரம் கோடியும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க ரூ. 32 ஆயிரம் கோடியும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் ஏறக்குறைய 40 சதவீதம் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது.

இந்நிலையில் இந்த மே மாத முடிவில் பல்வேறு துறைகளில் சுமார் 25,300 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

 ஏற்கெனவே சுமார் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில், இந்த 25 ஆயிரம் பேரும் இம் மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுவிட்டால் அரசுக்கு மேலும் தலைவலி ஏற்படக் கூடும்.

மேலும் விதிகளின் படி புதிய பணியாளர் நியமனம், அரசு அறிவிக்கை, கால அவகாசம், புதிய நியமனத்தில் ஏற்படும் குளறுபடிகள் ஆகிய காரணிகள் அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது. 


இதைவிட இந்த 25 ஆயிரம் பேருக்கும் பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட் பலன்களை வழங்க அரசுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி தேவைப்படுமாம்.


மாநிலத்தின் வரி வருவாய் அடியோடு குறைந்துவிட்ட இந்தத் தருணத்தில், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு தொகை இழுத்தடிப்பு ஆகிய பல காரணங்களால் அரசு பணியாளர்களை இந்த ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்துவிட்டால் நிலைமைகளை சரி செய்து கொள்ளலாம் என முதல்வருக்கு யோசனை வழங்கப்பட்டதாம். 


இந்நிலையில், யாருமே கோரிக்கை வைக்காதபட்சத்தில் அரசு திடீரென இந்த பணி நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறுகின்றனர்.

மேலும் இந்தப் பணி நீட்டிப்பினால் அரசு ஊழியர்களுக்கு வேலை தொடர்ச்சி என்ற மகிழ்ச்சி கிடைத்தாலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறும்போது பலன்கள் முழுமையாக வழங்கப்படுமா என்பதற்கும் உத்தரவாதம் இல்லை என அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தப் பணி நீட்டிப்பினால் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே சமீபத்தில் அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை ரத்து செய்ததையும் சுட்டிக் காட்டும் அரசு பணியாளர் சங்கத்தினர், இந்த பணி நீட்டிப்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி செலவினம் மீதம் செய்யப்படும் என்றும் நிதித்துறையின் புள்ளிவிவரத்தைக் குறிப்பிடுகின்றனர்.


மத்திய அரசில் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருக்கும் பட்சத்தில் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும் வயதை ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கும் அவர்கள், 1975-க்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக எடப்பாடி அரசு, பணி நீட்டிப்பு செய்தமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.

No comments:

Post a Comment