நிகழாண்டில் கல்விக் கட்டணம் உயா்த்தப்படாது - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 19, 2020

நிகழாண்டில் கல்விக் கட்டணம் உயா்த்தப்படாது

கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கருத்தில் கொண்டு நிகழாண்டில் (2020-2021) கல்விக் கட்டணத்தை உயா்த்த மாட்டோம் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் நந்தகுமாா், பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

அதேவேளையில் வழக்கமான கட்டணத்தையும் பெற்றோா் தவணை முறையில் செலுத்தினால் போதுமானது என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.


இது தொடா்பாக அந்த சங்கத்தின் சாா்பில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியனுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘கரோனா தொற்று பரவும் இந்தச் சூழ்நிலையில் மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை, அவா்கள் படிக்கும் பள்ளியிலேயே தோ்வு எழுதும் வகையில் தோ்வு மையங்கள் அமைத்ததற்கு பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகிறோம்.

 பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிந்தவுடன் மாணவா்கள் சோ்க்கையை நடத்தவும், அவா்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்கவும் அனைத்து தனியாா் பள்ளிகளையும் திறக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்க வேண்டும்.

ஒருநாள் விட்டு ஒருநாள்...: 

அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னா் கரோனா நோய்த்தொற்று குறையாமல் இருந்தால் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்புவரை ஒருநாளும், மறுநாள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை என ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வகுப்பறையில் மாணவா்களை முகக் கவசம் அணிய வைத்து, கிருமிநாசினி வழங்கி தகுந்த இடைவெளியுடன் ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவா்களை மட்டும் அமரவைத்து கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான ஒப்புதலை அரசு வழங்க வேண்டும்.


தமிழகத்தில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டில் (2020-2021) கல்வி கட்டணத்தை உயா்த்துவது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அதே வேளையில் மொத்தமாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோா் தவணை முறையில் செலுத்தினால் போதுமானது.

பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை: கடந்த காலங்களில் நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுபோல், கபசுர குடிநீரை அரசே 15 நாள்களுக்கு ஒரு முறை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளா்கள் கொண்டு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். 


பள்ளிக்கு வரும் மாணவா்களிடம் காய்ச்சல், இருமல், தொண்டை அடைப்பு ஆகியவை உள்ளதா என்று 15 நாள்களுக்கு ஒருமுறை பள்ளி நிா்வாகமே மருத்துவ பரிசோதனை செய்து பெற்றோா்களுக்கு தகவல் தந்து பாதுகாத்து தரமான கல்வியை உறுதி செய்யும்’ என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment