Whatsappஐ ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 12, 2020

Whatsappஐ ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள்


தகவல் தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது... நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இன்று வாட்ஸ்அப் மாறியுள்ளது. 


பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன.


 தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. நம்முடைய ஆறாம் விரலாய் கைகளில் ஒட்டிக்கொண்டுள்ள செல்போனை எடுத்ததும், ஒவ்வொருவரும் முதலில் பார்ப்பது வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன்களாகத்தான் இருக்கும்.


 அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வுடன் வாட்ஸ்அப் இரண்டறக் கலந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வாட்ஸ்அப்பை நாம் எவ்வாறு ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான சில டிப்ஸ்:



 1) வாட்ஸ்அப் வீடியோக்களைப் பார்ப்பதற்கு PIP எனும் ஒரு ஆப்ஷன் வாட்ஸ்அப்பில் உள்ளது. இந்த PIP (Picture-in picture) வசதி மூலம் வாட்ஸ்அப் வீடியோக்கள் பார்க்கும்போதே, போனில் வேறு பணிகளையும் செய்ய முடியும்.


 அதாவது, நாம் வீடியோக்களை சிறியதாக்கி மொபைல் ஸ்கிரீனில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு தொடர்ந்து வீடியோக்களைப் பார்க்கலாம். அதேநேரத்தில், மற்ற ஆப்ஸ்களையும் நாம் உபயோகிக்க முடியும். வாட்ஸ்அப்பில் நமக்கு வரும் வீடியோக்களில்... லிங்க்குகளுக்குப் பதில், அதில் காணப்படும் பிளே ஆப்ஷன் மூலம் PIP வசதியை நாம் பயன்படுத்த முடியும்.



 2) வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜில், வாக்கி-டாக்கி பட்டனைப் (Voice Msg Button) பயன்படுத்தும்போது ஹோல்டு செய்து பேசுவோம். பேசியபிறகு விரலை எடுத்தால், மெசேஜ் தானாகவே சென்றுவிடும். ஆனால், நாம் பேசியது சரியா? தவறா? என சோதித்துப்பார்க்க இதில் வழியில்லை.


 ஆனால், பேசியதை சோதித்துப் பார்க்க ஒரு சிறு நுட்பத்தைப் பயன்படுத்தலாம். வாக்கி-டாக்கி பட்டனை (Voice Msg Button) கீழிருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்து, விரும்பியவாறு பேசலாம். பிறகு, பேக் (Back) பட்டனையோ அல்லது ஹோம் பட்டனையோ அழுத்தி பின்சென்றுவிட்டால், நாம் பேசிய வாய்ஸ் மெசேஜ் போகாமல் அப்படியே இருக்கும். பிறகு, அதை சரியா என பிளே செய்து கேட்டுவிட்டு அனுப்பலாம். தவறென்றால் அழித்துவிடலாம்.


 3) அலுவலக உபயோகத்திற்கும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் என இரு வாட்ஸ்அப் நம்பர்கள் ஒரே போனில் நமக்குத் தேவை என்றால் அதற்கும் வசதி உள்ளது. நம்மிடம் உள்ள ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்த முடியும். பேரலல் ஸ்பேஸ் (Parallel Space) ஆப்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். வாட்ஸ்அப்பிற்கு மட்டுமல்லாது அனைத்து ஆப்ஸ்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.


 4) நம்முடைய முக்கியமான லிங்க்குகள், வீடியோக்கள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியவற்றை நமக்கே நமக்கு என்று, நாம் ஒருவர் மட்டுமே உள்ளவாறு ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கி, அதில் சேமித்து வைக்கலாம். நமக்கே நமக்கென வாட்ஸ்அப் குழு உருவாக்குவது எப்படி என்றால், வழக்கமாக வாட்ஸ்அப் குழு உருவாக்குவது போன்றே, நமக்கு நெருக்கமான யாரேனும் ஒருவரை மட்டுமே குழுவில் இணைத்து, பின் அவரை குழுவிலிருந்து உடனடியாக நீக்கி விடவேண்டும். இப்போது, நமக்கே நமக்கான குழுவில் நாம் மட்டுமே இருப்போம்.


 5) நமது ரகசியக் காப்பாளனாக வாட்ஸ்அப்பின் ஃபிங்கர் பிரின்ட் லாக் வசதி உள்ளது. முக்கியமான பல தகவல்களை நாம் வாட்ஸ்அப்பில் வைத்திருக்கிறோம் அல்லது தகவல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறோம் என்றால், ஃபிங்கர்பிரின்ட் ஆப்ஷனை நாம் பயன்படுத்தலாம். இது, ரகசியம் காக்க சிறந்ததொரு ஏற்பாடாக இருக்கும். நம்முடைய ஃபிங்கர் பிரின்ட்டை வைத்தால் மட்டுமே வாட்ஸ்அப் ஓப்பன் ஆகும் என்பதால், நமது பாதுகாப்பு உறுதிப்படும். 



6) நமது வாட்ஸ்அப் கணக்கிற்கு இருகட்ட பாதுகாப்பு வசதியை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும். இதற்கு, வாட்ஸ்அப்பின் Two - step verification-யை பயன்படுத்தி 6 இலக்க பின் நம்பரை உருவாக்க வேண்டும். 


அடுத்து, நமது மெயில் ஐடியை Safeguard Mail Id ஆகக் கொடுக்க வேண்டும். இதன்மூலம், நமது வாட்ஸ்அப் கணக்கு பாதுகாக்கப்படும். வேறு போன்களில் அல்லது புதிய போன்களில் நமது வாட்ஸ்அப்பை Install செய்ய 6 இலக்க பின் கட்டாயம் தேவைப்படும். ஒருவேளை நமக்கு Pin மறந்துவிட்டால் Backup Mail Id ஆக நமது Mail செயல்படும்.


 7) நமது போனில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை அப்படியே நமது கணினியில் பயன்படுத்த முடியும். இதற்கு Whatsapp Web வசதி பயன்படும். கணினியில் தோன்றும் QR code-ஐ நமது போனின் Whatsapp Web மூலமாக ஸ்கேன் செய்வதன் மூலம் கணினியில் நமது வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.


 8) நம் வாட்ஸ்அப்பில் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பும்போது, அவற்றின் தரம் (Resolution) குறைந்துவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. எனவே, நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் பிடித்தமான மீடியாக்களை அனுப்பும்போது அவற்றின் தரம் குறைந்துவிடாமல் இருக்க, வாட்ஸ்அப் மூலம் அனுப்பாமல், அவற்றை மெயில் மூலமாக அனுப்பிக்கொள்வதே சிறந்தது அல்லது வீடியோவாக அல்லாமல் ஃபைலாக அதை அனுப்பலாம். 


9) நமக்கு சில தனிநபர்களின் அல்லது குழுக்களின் செய்திகள் முக்கியமானவையாக இருக்கும். அந்த நபர்களையும் குழுக்களையும் வாட்ஸ்அப்பில் பின் (Pin) செய்து வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக இப்படி மூன்று உரையாடல்களைப் பின்செய்ய முடியும். இந்த மூன்று உரையாடல்கள், நமக்கு எப்போதும் வாட்ஸ்அப்பில் மேலேயே இருக்கும். 


10) இரவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது, டார்க் மோடு (Dark Mode) வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது. இரவில் வீடு முழுக்க இருட்டாக இருக்கும்போது, மொபைல் போனிலிருந்து வரும் அதிகப்படியான வெளிச்சத்தால் தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். எனவே, இரவில் வாட்ஸ்அப்பின் டார்க் மோடு வசதியைப் பயன்படுத்துவதே உகந்தது. லுக் பிடித்திருந்தால் இதை பகலிலும்கூட பயன்படுத்தலாம்.



 11) நேரமின்மை காரணமாக டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, சுருக்கமான தகவல் அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது நாம் வெளியில் இருக்கும்போது மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலோ, வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வாட்ஸ்அப்பின் வாக்கி டாக்கி பட்டனை உபயோகப்படுத்துவது சிறந்த வழியாக இருக்கும். 


12) வாட்ஸ்அப் குழுக்கள் நம்முடைய நேரத்தை நிறைய சாப்பிடுகின்றன. எனவே, தேவையற்ற குழுக்களிலிருந்து தயவு தாட்சண்யமின்றி வெளியேறிவிட வேண்டும். மறுபடியும் நம்மை அந்தக் குழுக்களில் இணைக்க முடியாதவாறு குரூப் செட்டிங்ஸில் மாற்றம் செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்துகொண்டால், நம் அனுமதியின்றி யாரும் நம்மை குழுக்களில் இணைக்க முடியாது.


 13) நாம் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜைப் படிக்கிறோம். அது மிக முக்கியமான மெசேஜாக இருக்கிறது என்றால், அதை நாம் உடனே ஸ்டார் (Star) செய்து வைத்துக்கொள்ளலாம். இதனால் தகவல்கள் தவறுதலாக அழிந்துபோக வாய்ப்பு இல்லை. ஸ்டார் செய்யப்பட்ட மெசேஜ்களை நமக்கு தேவைப்படும்போது சுலபமாக எடுத்து பார்த்துக்கொள்ள முடியும். 


14) நாம் உருவாக்கும் வாட்ஸ்அப் தகவல்களை கீபோர்டில் டைப் செய்துகொண்டிருந்தால், நமக்கு நேரம் அதிகம் பிடிக்கும். அதற்கு கூகுள் ஜீபோர்ட் (GBoard) உள்ளிட்ட வாய்ஸ் டைப்பிங் முறைகளை நாம் பயன்படுத்தும் போது, பத்துப் பக்கங்களைக்கூட நாம் சுலபமாக ஐந்து முதல் பத்து நிமிடங்களில் டைப் செய்துவிட முடியும்


. 15) வாட்ஸ்அப்பில், சமீபத்தில் குரூப் வீடியோ கால்கள் நான்கு நபர்களிலிருந்து எட்டு நபர்களுடன் பேசலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.


 16) ஒவ்வொருவரின் கண் பார்வைத் திறனும் வெவ்வேறாக இருக்கும். அதற்கேற்ப வாட்ஸ்அப்பில் எழுத்துகளின் (Fonts) அளவை நாம் மாற்றிக்கொள்ள முடியும் . எழுத்துகளை நமக்குப் பொருத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாக, நம் கண் பார்வைத் திறனுக்கு ஏற்றவாறு நாம் விரைவாக வாசிக்க முடியும்.


 17) வாட்ஸ்அப்பில் வால்பேப்பரை தினமும் ஒரே மாதிரி வைத்துக் கொண்டிருக்க போரடிக்கிறது என்றால், வால்பேப்பரை தினமும் மாற்றி புத்துணர்வூட்டிக்கொள்ளலாம். நமக்கு விருப்பமான வண்ணங்கள், புகைப்படங்கள் என எதை வேண்டுமானாலும் பேக்ரவுண்ட் வால்பேப்பராக வைத்துக்கொள்ள முடியும். 


18) வாட்ஸ்அப்பில் ஒருமுறைக்கு ஐந்து நபர்கள் அல்லது குழுக்களுக்கு மட்டுமே தகவல்களை ஃபார்வேர்டு செய்ய முடியும். அதுவும் தற்போது கொரோனாவினால் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தகவல்களை காப்பி செய்து, விரும்பும் நபர்கள் அல்லது குழுக்களில் பேஸ்ட் செய்வதன் மூலம் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் ஒரேமுறையில் தகவல்களை அனுப்பிவிட முடியும். 



19) நம்முடைய போனின் மெமரியை வாட்ஸ்அப்பில் வரக்கூடிய வீடியோ/ஆடியோ/புகைப்படங்கள் பெருமளவு பிடித்துக் கொள்ளும். அவ்வப்போது வாட்ஸ்அப் மெசேஜ்களை கிளீயர் சாட் கொடுத்து விடுவது நல்லது. கிளீயர் சாட் கொடுக்கும்போது, அதிலுள்ள மீடியாக்களையும் சேர்த்தே நாம் கிளீயர் செய்துவிடுவது சிறந்தது. அவசியம் தேவையான மீடியாக்கள் மற்றும் தகவல்களை முன்பே கூறியதுபோல நாம் ஸ்டார் (star) செய்து வைத்துக்கொள்ளலாம்.

 20) குழுக்களில் யாரேனும் ஒருவர் பகிர்ந்த தகவலில், நமக்கு எதேனும் முரண்பாடுகள் இருப்பின், அவரை டேக் செய்து குழுக்களில் கடுமையான விமர்சனங்களைப் பகிரும்போது, அவருக்கு மனச் சங்கடம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலிலும், குழுவில் ஒருவர் அனுப்பிய செய்திக்கு தனிப்பட்ட முறையில் நாம் பதில் அளிக்க விரும்பும்போதும், ரிப்ளை பிரைவேட்லி (Reply Privately) எனும் ஆப்ஷனைப் பயன்படுத்தி அவருக்கு மட்டுமே நாம் மெசேஜ் அனுப்பி, நமது கருத்தைப் பதிவு செய்துவிட முடியும்.


 21) இந்த மெசேஜை பத்துப் பேருக்கு ஃபார்வேர்டு செய்தால், உங்களுடைய கணக்கில் 10 GB சேரும். குறிப்பிட்ட தகவலைப் பகிர்ந்தால், இந்த அரசியல் தலைவர் அல்லது இந்த கம்பெனி இத்தனை GB இலவசமாகத் தருவார்கள். இதைப் பகிர்ந்தால் கார், போன் உள்ளிட்டவை பரிசாகக் கிடைக்கும் என்ற ரீதியில் வரக்கூடிய நெட்வொர்க் டேட்டா மற்றும் பரிசுகள் தொடர்பான மெசேஜ்கள், நம்மை முட்டாளாக்கக் கூடியவை. இவற்றை நாம் கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும்.



 விளம்பர நோக்கிலோ அல்லது ஒருவரது தகவல்களைத் திருடும் நோக்கிலோ தான் இத்தகைய போலியான செய்திகள் உருவாக்கப்படுகின்றன. ஒருவேளை, நெட்வொர்க்கிலிருந்து இலவச டேட்டா அளிக்கப்படுவது உண்மை என்றால், நம்முடைய மொபைல் எண்ணுக்கு நெட்வொர்க் நிறுவனத்திடமிருந்து நேரடியாகத் தகவல் வரும். இவ்வாறு வாட்ஸ்அப் மூலமாக அவர்கள் தகவல் பரப்ப மாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.


 22) இந்த மெசேஜை ஒருமுறை பகிர்ந்தால், ஏழைக் குழந்தையின் மருத்துவ செலவிற்கு வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வளவு தொகை கொடுக்கும் என்ற ரீதியிலான தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை என்பதை நாம் அறியவேண்டும். இப்படியான ஒரு நடைமுறை வாட்ஸ்அப்பின் இயங்கு விதிமுறைகளில் இல்லை

. 23) ரத்தம் தேவை, குழந்தைகளைக் காணவில்லை என்ற ரீதியில் வரக்கூடிய மெசேஜ்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் நாம் அணுக வேண்டும். தகவலின் உண்மைத் தன்மையை அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தகவல் உண்மையா பொய்யா என நாம் சோதித்து அறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அவற்றைப் பகிர்வது சிறந்தது. சில நேரங்களில், இரண்டு வருட பழைய மெசேஜ் எல்லாம் தற்போது ஃபார்வேர்டு ஆகிகொண்டிருக்கும்.


 24) குறிப்பிட்ட கடவுளின் படத்தை பத்துப் பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்ற ரீதியில் வரக்கூடிய போட்டோக்களை ஒருவித ஜென் மனநிலையுடன் கடந்து செல்வதே நம்முடைய மரியாதையை காப்பாற்றிக்கொள்ள சிறந்த வழியாக இருக்கும். 


25) நமக்கு வரக்கூடிய மெசேஜ்கள் அனைத்தையுமே ஃபார்வேர்டு செய்யக்கூடிய போஸ்ட்மேன் வேலையைச் செய்யாமல் இருப்பதே நாம் வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தத் தொடங்குவதன் ஆரம்பப்புள்ளி. வாட்ஸ்அப்பில் அப்டேட் கிடைக்கும்போது, உடனே அப்டேட் செய்துகொள்வது ஒரு ஸ்மார்ட்டான உத்திதான். மேலும், வாட்ஸ்அப்பில் வரும் எந்த ஒரு புதுமையையும் முதலில் Beta பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.



 அதில் உள்ள நிறைகுறைகள் நீக்கப்பட்டு, பின்னர் பொதுப் பயன்பாட்டிற்கு வரும். வாட்ஸ்அப்பின் புதுமைகளை உடனே பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என விரும்புவோர், தங்களை Beta பயனாளிகளாக மாற்றிக்கொள்ளலாம். புதுமைகளைப் பயன்படுத்தி, அவற்றிற்கான Feedback கொடுக்கலாம். இதற்கான வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது. 

நாம் எப்போதுமே, தகவல்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கக்கூடிய கம்யூனிகேட்டர் வேலையையும், போஸ்ட்மேன் வேலையையும் செய்துகொண்டிருக்காமல், நமக்கு தோன்றக்கூடிய தகவல்களை நாமே சுயமாக உருவாக்கிப் பகிர்ந்தோம் என்றால், நமது சுற்று வட்டாரத்தில் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.


 நம்முடைய அறிவுத்திறனும், சுயசிந்தனையும் மேம்படும். எனவே, தகவல்களை ஃபார்வர்டு செய்வதை விட்டுவிட்டு, சுயமாக உருவாக்க முயற்சி செய்வதே சிறந்தது. தேவையான மற்றும் முக்கியமான தகவல்களை மட்டுமே ஃபார்வர்டு செய்யலாம். வாட்ஸ்அப்பை பொறுத்தவரை தகவல் பகிர்வதில் நமக்கு நாமே சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வோம்... குறைவான நேரத்தில் நிறைவான பணி என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுவோம்

No comments:

Post a Comment