கெட்டுப்போன சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வாங்க அதிகாரிகள் மறுப்பு: சத்துணவு ஊழியர்கள் அலைக்கழிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 9, 2020

கெட்டுப்போன சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வாங்க அதிகாரிகள் மறுப்பு: சத்துணவு ஊழியர்கள் அலைக்கழிப்பு

கெட்டுப்போன சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வாங்க அதிகாரிகள் மறுப்பு: சத்துணவு ஊழியர்கள் அலைக்கழிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் கெட்டுப்போன சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, கொண்டைக்கடலையை நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் வாங்க மறுப்பதால் சத்துணவு ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 1,296 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது.

இப்பள்ளிகளுக்கு சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், பூவந்தி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து அரிசி, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சமையல் எண்ணெய் போன்றவை நேரடியாக விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால் சத்துணவு மையங்களில் இருந்த சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, கொண்டைக்கடலை வீணாகும்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவற்றை நுகர் பொருள் வாணிப கழக குடோன்களில் ஒப்படைக்க சத்துணவு ஊழியர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். கிராம பள்ளிகளில் இருந்து பல கி.மீ.,-ல் உள்ள குடோன்களுக்கு எண்ணெய், பருப்புகளை கொண்டு செல்வதில் சத்துணவு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும் பல பள்ளிகளில் எண்ணெய், பருப்புகள் கெட்டுபோகின. ஆனால் அவற்றை வாங்க நுகர்பொருள் வாணிப கழக குடோன் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் மீண்டும் அந்த பொருட்களை பள்ளிகளுக்கே சத்துணவு ஊழியர்கள் எடுத்துச் செல்லும்நிலை உள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, செயலாளர் சீமைச்சாமி கூறியதாவது: பல பள்ளிகள், நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து 70 கி.மீ., க்கு அப்பால் உள்ளன.

அப்பள்ளிகளில் இருந்து பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் ஏற்கனவே பள்ளிகளுக்கு விநியோகித்த வாகனங்கள் மூலமே பொருட்களை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வழங்கிய எண்ணெய், பருப்புகள் கெட்டுபோய்விட்டன. அவற்றை குடோன் அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அவற்றையும் வாங்கி கொள்ள வேண்டும், என்று கூறினர்.

No comments:

Post a Comment