தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, June 27, 2020

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு
தமிழகம் முழுவதும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிகள் செயல்படாத நாள்களுக்கான சத்துணவுக்குரிய தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி விடுவதெனத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்தத் திட்டம் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர்களுக்கு தற்போது பள்ளிகள் செயல்படாததால், அந்த நாள்களுக்குரிய உணவூட்டத் தொகையை மாணவ, மாணவியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காகத் தமிழக அரசானது, தேவையான எரிவாயு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்து தினமும் வழங்கி வருகிறது. இந்த பொருள்கள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் மேற்பார்வையில், சமையலர்கள் உணவைத் தயார்செய்து வழங்கி வருகின்றனர்.

கரோனா நோய்த்தொற்றால், முன்னெச்சரிக்கை கருதி, அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. இன்று ஜூன் 27 ஆம் தேதி சனிக்கிழமையுடன் 104 நாள்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்குரிய சத்துணவும் வழங்கப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டது

இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நாள்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப்பொருள்களாகவோ, உணவூட்டத்தொகையாகவோ வழங்க, தமிழ்நாடு சமூகநலத் துறையின் ஆணையர் (ந.க.எண்-10884-சஉதி-நாள்-ஜூன் 10 -ஆம் தேதி) உத்தரவிட்டு, அதன் உத்தரவு நகல் வாட்ஸ்ஆப் மூலம் ஜூன் 22 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 இதில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களது நேரடி வங்கிக்கணக்கு எண்கள், வங்கிகளின் ஐஎப்சி கோட், எம்ஐசிஆர் கோட், வங்கியின் பெயர், கிளை பெயர் என்று அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தமிழக அரசின் இத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்று என்றனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றும், மாணவ, மாணவியர்களது வங்கிக்கணக்குகளைத் திரட்டி, தொகுத்து மின்னஞ்சல் மூலம் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் வங்கிக் கணக்குகள் இன்னும் ஒருசில நாள்களில் தலைமையாசிரியர்கள் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், சென்னை சமூக நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடும் கடைசிக்கட்டத்தில் உள்ளது. 

இதன் பின்னர், ஒருசில வாரங்களுக்குள், தமிழக அரசின் உணவூட்டத் தொகையானது அந்தந்த மாணவரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது

No comments:

Post a Comment