அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 38 உதவி மையங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 22, 2020

அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 38 உதவி மையங்கள்

அரசு கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 38 உதவி மையங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு மாநிலம் முழுவதும் 38 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 109 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. 

இக்கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் இளநிலை பட்டப்படிப்புகளில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன

 அந்தந்தக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் அரசுக் கல்லூரிகளில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தே, http://tngasa.in, http://tndceonline.org ஆகிய இணையதளம் மூலமாக கணினி அல்லது செல்பேசி வழியே விண்ணப்பிப்பதற்காக உயர் கல்வித்துறை வழிவகை செய்துள்ளது. இதன்படி ஜூலை 20-ம் தேதி முதல் மேற்கண்ட இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இணையதள வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள், இணையதளத்தில் பயிற்சி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தமிழகத்தில் 38 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் க.சித்ரா கூறியதாவது:

''கோவை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் கணினி அல்லது செல்போன் மூலமாக விண்ணப்பிக்க வசதியில்லாதவர்கள் மட்டும் இங்கு விண்ணப்பிக்க வரலாம்

நேரிலும் விண்ணப்பிக்கலாம்

இம்மையத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள எந்த அரசு கலைக் கல்லூரியிலும், எந்த பாடப்பிரிவிலும் சேரவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும்போது, அதற்கேற்றாற்போல் கட்டணம் செலுத்த வேண்டும். 

தனியாக விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலமாகக் கட்டணம் செலுத்த வேண்டும். சேவை மையத்தில் நேரில் விண்ணப்பிப்பவர்கள் பணமாகச் செலுத்தலாம். ஆன்லைன் பதிவுக்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பலர் கல்லூரிக்கு நேரில் வந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரில் வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சேவை மையத்தில் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment