ஆன்லைன் வகுப்பு:செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரங்களில் பரண் அமைத்து படிக்கும் மாணவர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, July 26, 2020

ஆன்லைன் வகுப்பு:செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரங்களில் பரண் அமைத்து படிக்கும் மாணவர்கள்

ஆன்லைன் வகுப்பு:செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரங்களில் பரண் அமைத்து படிக்கும் மாணவர்கள்
கூடலூர் அருகே உள்ள மலைக்கிராமங்களில் செல்போன் டவர் பழுதாகியதால் சிக்னல் கிடைக்காமல் மரங்களில் பரண் அமைத்தும், உயரமான பாறைகளில் அமர்ந்தும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் படித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் 60 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர்.


 இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சந்தனமலையில் 10 ஆண்டுக்கு முன் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டாக டவர் செயல்படாத காரணத்தால் கிராம மக்கள் தகவல் தொடர்பின்றி பிரச்னையில் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகளில்  நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் முழுமையாக கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.


 செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால், பெரிய சோலை, எல்லமலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள்  வீடுகளை விட்டு வெளியேறி மலை, குன்று மற்றும் மரங்களில் அமர்ந்து, தொடர்பு கிடைக்கும் பகுதிகளிலிருந்து வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.


பெரிய சோலையில் மலைப்பாங்கான பகுதியில் மரத்தில் பரண் அமைத்தும்,  உயரமான பாறைகளில் அமர்ந்தும் படித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் சென்று படிப்பதால் காட்டு யானை  விரட்டுகின்றன.

சந்தனமலையில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவருக்கு இதுவரை மின்வசதி அளிக்கப்படவில்லை.

 பிஎஸ்என்எல் சார்பில் அங்கு ஜெனரேட்டர் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 வருடமாக உரிய நேரத்தில் ஜெனரேட்டர்களுக்கு டீசல் சப்ளை செய்யாத காரணத்தால் சரியாக இயங்குவதில்லை.


 இங்குள்ள சோலார் வசதியும் ஓரிரு மணி நேரம் மட்டுமே இயங்குகிறது. மழை காலங்களில் இது முழுமையாக இயங்குவதில்லை.


 இங்குள்ள தொலைதொடர்பு கோபுரத்திற்கு மின்வசதி அளிக்கப்பட்டால் மட்டுமே அனைத்து பகுதிக்கும் தொலைத்தொடர்பு முறையாக கிடைக்கும் இதன் மூலம் மாணவர்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்து படிக்க முடியும்.

No comments:

Post a Comment