கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 நாளில் 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 நாளில் 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கை

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 நாளில் 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கை


கரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலைவாய்ப்பு இழந் துள்ள நிலையில், தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 நாட்களில் 72728 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

தமிழக அரசு கடந்த 17-ம் தேதி முதல் எல்கேஜி முதல் 9 வகுப்புகளுக்கும், கடந்த 24-ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப் புக்கும் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகை யில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1455 தொடக்கப்பள்ளிகள், சுமார் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 266 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இப் பள்ளிகளில் கடந்த 17-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த பள்ளிகளில் 72,728 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 16370 மாணவ, மாணவிகளும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 56,358 மாணவ, மாணவிகளும் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலரும் கடந்த ஆண்டு வரை தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள்


இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகள் சிலவற்றில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதிகள், ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது,’’ என்றனர்.


இதுதொடர்பாக தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்த்துள்ள வியாபாரி குமார் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் எனது மகனை தொடர்ந்து தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியாததால், அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன். மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது முயற்சிகளால் ஸ்மார்ட் வகுப்பறைகள், தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

No comments:

Post a Comment