அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; 32 கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் தயாரிப்பில் தாமதம்: அழைப்பு வராததால் மாணவர்கள் அச்சம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; 32 கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் தயாரிப்பில் தாமதம்: அழைப்பு வராததால் மாணவர்கள் அச்சம்

 அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; 32 கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் தயாரிப்பில் தாமதம்: அழைப்பு வராததால் மாணவர்கள் அச்சம்


தமிழகம் முழுவதும் 32 அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக முதல்முறையாக இணையவழி விண்ணப்பப்பதிவு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி, இணைய வழியில் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். தரவரிசை அடிப்படையில் தேர்வாகும் மாணவர்களை 26-ம் தேதி முதல் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கல்லூரி அளவிலான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் என்றும் உயர்கல்வித் துறை அறிவுறுத்திருந்தது.


ஆனால், தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை பணி பாதிப்படைவதுடன், அழைப்பு வராததால் மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்


இதுதொடர்பாக அரசு கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:


அரசு கல்லூரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணபித்த மாணவர்களின் பெயரை, ஒவ்வொரு பாடப்பிரிவின் தரவரிசை பட்டியலிலிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் அனைத்து விண்ணப்பங்களையும் கல்லூரி முதல்வர் சரிபார்க்க வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அரசு கல்லூரிகளுக்கு வந்த ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களை சரிபார்க்க தாமதமாகிவிட்டது.


அதேபோல், அரசு கல்லூரிகள் அனைத்தும் ஒரே இணைய சர்வர் பயன்பாட்டில் உள்ளன. எனவே, சர்வரில் இருந்து மாணவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது. மேலும், சில மாணவர்களின் சான்றிதழ்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு சான்றிதழை அனுப்பவும் சில கல்லூரிகளில் பேசி வருகிறார்கள். இதனால், கல்லூரி அளவிலான தரவரிசை பட்டியலை தயார் செய்ய முடியவில்லை என்றனர்.


இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தற்போது வரை 32 அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்த கல்லூரி முதல்வர்களை தொடர்பு கொண்டு, தாமதத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் போதிய வசதி இல்லாததால் மாணவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை.


இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment