மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 13, 2020

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு  வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சட்டமாக இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, தமிழக அரசு, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.


இதை விசாரித்த உயர்நீதிமன்றம்,” ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது. அதனால் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டு தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும்.


 மேலும் அடுத்த 3 மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என  உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மேல்முறையீட்டு மனு ஒன்று கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.


அதில்,”ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அடுத்தாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அதுகுறித்த சட்ட வரையறை உடனடியாக உருவாக்கி இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில்  இன்று 12வது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து இடஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டம் இந்த ஆண்டே நடைமுறைக்கு வருமா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment