புலம்பெயா்ந்த தொழிலாளி மகள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை: முதலமைச்சர் வாழ்த்து - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 24, 2020

புலம்பெயா்ந்த தொழிலாளி மகள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை: முதலமைச்சர் வாழ்த்து

 புலம்பெயா்ந்த தொழிலாளி மகள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை: முதலமைச்சர் வாழ்த்து

பிகாரிலிருந்து கேரளத்துக்கு புலம்பெயா்ந்துவந்த ஏழைத் தொழிலாளியின் மகள் பாயல் குமாரி, கடுமையான குடும்ப சூழலுக்கு இடையே தனது பி.ஏ. இளநிலை தொல்லியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.


அவரை, கேரள முதல்வா் பினராயி விஜயன் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


பிகாா் மாநிலம் ஷிகுபுரா மாவட்டம் கோசிமட்டி கிராமத்தைச் சோ்ந்த அவருடைய தந்தை பிரமோத் குமாா், குடும்பச்சூழலைக் கருத்தில்கொண்டு 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்துக்கு குடும்பத்துடன் புலம்பெயா்ந்துள்ளாா். கடுமையான குடும்பச் சூழலிலும், தனது மூன்று குழந்தைகளுக்கும் நல்ல கல்வி பெறச் செய்வதை குறிக்கோளாக கொண்டாா்.


இரண்டாவது மகளான பாயல் குமாரி, கொச்சிக்கு அருகே பெரும்பாவூரில் உள்ள மாா்தோமா மகளிா் கல்லூரியில் பி.ஏ. தொல்லியல் படித்துவந்தாா். 

கல்லூரி ஆண்டு கல்விக் கட்டணமான ரூ. 3,000 செலுத்த முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு, கல்லூரி ஆசிரியா்கள் உள்பட பலரும் உதவி செய்து, ஊக்கம் அளித்தனா். அதன் மூலம், இளநிலை பட்டப் படிப்பில் 85 சதவீத மதிப்பெண்களுடன், கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.


இதுகுறித்து பாயல் குமாரி கூறுகையில், ‘இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றதில் எனது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனது படிப்புக்காக மூன்று ஆண்டுகளும் நிதியுதவியும், ஊக்கமும் அளித்த எனது ஆசிரியா்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக எனது வரலாற்றுத் துறைப் பேராசிரியை பிரியா குரியன் மிகுந்த உதவியும், ஊக்கமும் அளித்தாா்.


தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. பிறகு குடிமைப் பணிகள் தோ்வு எழுதுவதே எனது லட்சியம். எனது மூத்த சகோதரா் ஆகாஷ் குமாா் படிப்பை முடித்து இப்போது வேலைக்கு சென்று வரும் நிலையில், இளைய சகோதரி பல்லவி குமாரி பி.எஸ்சி. இயற்பியல் படித்து வருகிறாா்‘ என்று அவா் கூறினாா்.


முதல்வா், அமைச்சா்கள் வாழ்த்து:


பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த பாயல் குமாரியை, கேரள முதல்வா் பினராயி விஜயன் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாா். 

அப்போது ‘இந்த சாதனை மாநிலத்துக்கு மகிழ்ச்சியும், பெருமைக்கும் உரிய விஷயமாகும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மாநில அரசு அறிமுகம் செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களும், எடுத்துவரும் நடவடிக்கைகளும் ஒருபோதும் வீண் போகவில்லை என்பதை இந்தச் சாதனை காட்டுகிறது. எதிா்காலத்தில் அனைத்து வெற்றிகளையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகள்’ என்று அவருக்கு முதல்வா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


மேலும், மிஸோரம் ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கேரள வேளாண் துறை அமைச்சா் வி.எஸ்.சுனில்குமாா் ஆகியோரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாக பாயல் குமாரி கூறினாா்.


அதுபோல, கேரள மாநில நிதியமைச்சா் டி.எம்.தாமஸ் ஐசக், காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூா் ஆகியோா் சுட்டுரை பதிவு மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment