ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் மீதம் உள்ள நேரங்களில் விதைப்பந்துகள் தயாரிக்க ஆர்வம் காட்டும் சகோதரிகள்
கொடைக்கானலில் வசிக்கும் சகோதரிகள் இருவர் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் மீதம் உள்ள நேரங்களில் விதைப்பந்துகள் தயாரித்து வருகின்றனர். ஒரு லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்து கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வீச முடிவு செய்துள்ளனர்.
கொடைக்கானலைச் சேர்ந்த யூஜின் அசோக் என்பவரது மகள்கள் சுபகீதா(16), சஜிதா(14). கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் சுபகீதா பிளஸ் 1-ம், சஜிதா ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர்
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தினமும் ஆன்லைன் மூலம் ஒரு மணி நேரம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மீதம் உள்ள நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்க முடிவு செய்த சகோதரிகள் விதைப்பந்துகள் தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக தனது தந்தையின் உதவியை நாடினர். உறவினர்கள் உதவியுடன் யூஜின் அசோக் விதைப்பந்து தயாரிக்கத் தேவையான பல்வேறு வகையான விதைகள், மண் ஆகியவற்றை சேகரித்துக் கொடுத்தார்.
இவற்றைக் கொண்டு ஒரு வாரமாக விதைப்பந்துகள் தயாரிக் கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான விதைப் பந்துகளை தயாரித்துள்ளனர்.
இது குறித்து சகோதரிகள் சுபகீதா, சஜிதா கூறியதாவது:
நவா, சில்வர் ஓக், செங்காந்தள், கொட்டலாம் பழம், வேப்பமர விதைகளை விதைப்பந்துகளாகத் தயாரித்து வருகிறோம். மேலும் பல வகை மரங்களின் விதைகளைக் கேட்டுள்ளோம்.
மலைப்பகுதியில் விளையும் ருத்ராட்ச மர விதைகளையும் சேகரித்து அவற்றை விதைப் பந்துகளாகத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.
ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்ததும் அவற்றை கொடைக் கானல்- வத்தலகுண்டு சாலையின் இருபுறங்களிலும் வீச உள்ளோம். இதேபோல் அடுக்கம்-பெரியகுளம் மலைச்சாலை, பழநி வரை உள்ள மலைச்சாலை, கொடைக்கானல் மேல்மலைப்பகுதி எனப் பல்வேறு பகுதிகளில் விதைப்பந்துகளை வீச உள்ளோம்.
தற்போது மழைக்காலம் என்பதால் விதைப்பந்துகள் முழுமையாக வளர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் மலைப்பகுதி சில ஆண்டுகளில் அதிக அளவில் மரம் வளர்ந்து கூடுதல் வனப்புடன் காணப்படும். சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாக்க எங்களால் ஆன முயற்சியாக இப்பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment