விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 13, 2020

விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரை காமராசர் பல்கலை தொலைநிலைக்கல்வியில் தேர்வு விடைத்தாள் முறைகேடுக்கு காரணமான தேர்வாணையர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து இஸ்மாயில் கூறும்போது, "காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் சில மாதங்களுக்கு முன்பு, திண்டுக்கல் தேர்வு மையங்களில் இருந்து பல்கலைப் பேருந்து மூலம் கொண்டு வரப்பட்ட விடைத்தாள்கள் மாயமானதாகப் புகார் எழுந்தது.


துணைவேந்தரின் நடவடிக்கையால் மாயமான விடைத்தாள்கள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்கள் ஓரிருவர் மீது பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.


கடந்த வாரம் கேரளவிலுள்ள 3 தேர்வு மையங்களில் தேர்வெழுதிய சுமார் 700 பேருக்கு சாதகமாக முடிவு அறிவிக்கும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் என, ரூ.3.50 கோடி வரை வசூலித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிண்டிக்கேட் குழு ஒன்று விசாரிக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் அளிக்கப் பல்கலை நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.


தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில இடங்களில் தொலைநிலைக் கல்வி தேர்வு எழுதாமல் விடைத்தாள்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது போன்ற முறைகேடு, தவறுகளுக்கு பல்கலை தேர்வாணையர் ரவி உள்ளிட்ட தேர்வுத்துறையைச் சேர்ந்த சில அலுவலர்களே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், கல்லூரி முதல்வர்கள் சங்க கவுரவச் செயலருமான இஸ்மாயில் புகார் எழுப்புகிறார்.


மேலும், அவர் கூறியது: ஏற்கெனவே தேனியிலுள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை மைய பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய தேர்வாணையர் ரவி அவரது அறையில் அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.


மேலும், கேரளாவில் 3 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் வழங்கி, இடையில் சேர்த்தது கண்டறியப்பட்டுள்ளது.


இதற்கிடையில் திருவண்ணாமலை, வேலூர், தென்காசி, செங்கோட்டை களியக்காவிளை ஆகிய தேர்வு மையங்களிலும் விடைத்தாள்கள் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.


திருவண்ணாமலை தேர்வு மையத்தில் தேர்வு எழுதாமலேயே விடைத்தாள்கள் பல்கலைக்கு வந்திருப்பது துணைவேந்தர் அனுப்பிய சிறப்புக்குழு விசாரணை மூலமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இது போன்ற முறைகேடு, தவறுகளால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதற்குக் காரணமான தேர்வாணையர் ரவியிடம் இதுவரை விளக்கக் கடிதம் மட்டுமே கேட்டுப் பெறப்பட்டுள்ளது.


விடைத்தாள் முறைகேடு தொடர்வதால் அவர் உட்பட சம்பந்தப்பட்ட அலுவலர்களை இடைநீக்கம் செய்யவேண்டும் என துணைவேந்தரிடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment