பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 31, 2020

பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி

 பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


கரோனா பெருந்தொற்று காலத்தில், நாட்டின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதனை ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


ஜான்சி பகுதியில் விவசாய பல்கலைக்கழகத்தின் கட்டடத்திறப்பு விழாவில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டு கட்டடங்களை திறந்துவைத்தார். பிறகு அவர் பேசியதாவது, ''30 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தின் பண்டேல்கண்ட் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரித்தது. பாரம்பரிய முறைகள் மூலம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பது கடினம். 


அதனால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெட்டுக்கிளிகளை இந்தியா கட்டுப்படுத்த முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது. கரோனா பரவலில் வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு வெளிச்சத்திற்கு வரவில்லை.


விவசாயத்திற்காக அரசு சார்பில் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. ட்ரோன், சிறியரக விமானங்கள் போன்றவை மருந்து தெளிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயத்தில் மிகப்பெரிய இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.


விவசாயம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பயன்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையிடம் கொண்டுசெல்ல வேண்டும். 


விவசாயம் சார்ந்த கல்வியையும், அதன் செய்முறை எளிமைகளையும் பள்ளிக் கல்வி அளவில் கொண்டுசெல்ல வேண்டியது முக்கியமானது. கிராமப்புறங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் விவசாயத்தை ஒரு பாடமாக்க வேண்டியது அவசியம்.


இதன் மூலம் இரண்டு விதமான பலன்களை நாம் அடைய இயலும், ஒன்று, கிராமப்புற மாணவர்கள் விவசாயத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள இயலும். மற்றொன்று, விவசாயம் சார்ந்த தெளிவான அறிவையும், அதற்கு தேவையான நுட்பங்களையும், வியாபாரம் செய்யும் முறையையும் தெரிந்துகொள்ள இயலும். 


விவசாயிகளும், விவசாயமும் தொழில்துறையாக மாறினால், வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்'' இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்

No comments:

Post a Comment