ஊரடங்கு நீட்டிப்பா;அடியோடு நீக்கமா? : 29ல் ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, September 24, 2020

ஊரடங்கு நீட்டிப்பா;அடியோடு நீக்கமா? : 29ல் ஆலோசனை

 ஊரடங்கு நீட்டிப்பா;அடியோடு நீக்கமா? : 29ல் ஆலோசனை


சென்னை: தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கை, அடுத்த மாதமும் நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என, மருத்துவ நிபுணர் குழுவினருடன், வரும், 29ம் தேதி, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் அறிவுரைப்படி, தளர்வுகளை அறிவித்து வருகிறார்.இம்மாதம் முதல், பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. பஸ், ரயில், மெட்ரோ ரயில் போன்றவை இயக்கப்படுகின்றன.மின்சார ரயில் மட்டும் இயக்கப்படவில்லை. அதையும் விரைவில் இயக்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.


தற்போது கடைகள், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் நேரத்தை நீட்டிக்க வேண்டும். மூடிக் கிடக்கும் மார்க்கெட்டுகளை திறக்க, அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.திருமணத்தில், 50 பேர்; இறுதி சடங்கில், 25 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.


ஐந்து பேருக்கு மேல், பொது இடங்களில் கூடவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி, தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு, இம்மாதம், 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிக்காமல், ஏற்கனவே இருந்த அளவிலேயே உள்ளது.


இந்த சூழ்நிலையில், அடுத்த மாதம், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது முழுமையாக தளர்த்திவிடலாமா என்பது குறித்தும், நோய் பரவலை முற்றிலுமாக தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும், 29ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.அன்றைய ஆலோசனைக்கு பின், ஊரடங்கு நீட்டிப்பா அல்லது முழுதும் தளர்வா என்பதை, முதல்வர் அறிவிப்பார்.

No comments:

Post a Comment