வேளாண் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் 4,800 இடங்களுக்கு குவிந்த 45 ஆயிரம் விண்ணப்பங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 13, 2020

வேளாண் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் 4,800 இடங்களுக்கு குவிந்த 45 ஆயிரம் விண்ணப்பங்கள்

வேளாண் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் 4,800 இடங்களுக்கு குவிந்த 45 ஆயிரம் விண்ணப்பங்கள்

இந்த ஆண்டு வேளாண்மைக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலத்தில் 14 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன.


இந்தக் கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு, வனவியல், உயிரி தொழில் நுட்பவியல், வேளாண் வணிகவியல் உட்பட 10 இளங்கலை வேளாண் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளை 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 1,800 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 3,000 இடங்கள் என மொத்தம் 4,800 இடங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், கவுன்சலிங் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு வேளாண் படிப்புகளில் சேர 42,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு தற்போது வரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். செப்.17-ம் தேதி இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதனால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றால் இணைய வழியாக மாணவர் சேர்க்கையை நடத்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி முதல்வர் மா.கல்யாண சுந்தரத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மாணவிகள் அதிகம்

கரோனா பரவும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில்கூட மருத்துவம், பொறியியல் கல்வியைவிட, வேளாண் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதுவரை45 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கரோனாவால் பொறியியல்பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வேலையில் இருந்தாலும் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மட்டும் படித்தவர்களுக்கு தற்போது அதிக வேலைவாய்ப்பு இல்லை. அவர்கள் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புகளை படித்தால்தான் வேலை கிடைக்கும். ஆனால், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் மட்டுமே இந்த கரோனா காலத்தில் கூட தடைபடாமல் நடக்கிறது. வருவாய் குறைந்தாலும் நஷ்டம் ஏற்படவில்லை.

இங்கேயே வேலை

வேளாண் கல்வி பயின்றால்இங்கேயே நல்ல வேலையைத் தேடிக் கொள்ளலாம். மேலும் குடிமையியல் தேர்வுகளை எழுதி உயர்ந்த பொறுப்புகளுக்குச் செல்லலாம். ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். ஆக உள்ள ஏராளமானோர் வேளாண் படிப்பு படித்தவர்களே. அதுபோக, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரி ஆகலாம்.தனியார் உர, மருந்து நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

வேளாண் நிலம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் குறைந்துவிட்டார்கள். மழையளவு குறைந்து வருகிறது. அதனால், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பம் படித்த வேளாண் வல்லுநர்கள் அவசியம். வேளாண் படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. ஒரு பருவத்துக்கே ரூ.4,500 மட்டுமேதான் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதே கட்டணம்தான் தனியார்கல்லூரிகளிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்தகல்விக் கட்டணம் வேறு படிப்புகளில் கிடையாது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு நிறைய கல்வி உதவித் தொகை கிடைக்கிறது. வங்கிகளும் வேளாண் படிப்புகளுக்கு தாராளமாகக் கடனுதவி செய்கின்றன. விடுதிக் கட்டணமும் குறைவுதான்.

படிக்கும் மாணவர்களுக்கு நூலக வசதி, ஆய்வுக்கூட வசதி, பாடம் நடத்தும் அனைத்துஆசிரியர்களும் பி.எச்டி படித்தவர்கள் போன்ற காரணங்களால் வேளாண் படிப்பு முடித்து வெளியே வருவோருக்கு வேலைவாய்ப்பு உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment