போலி பணி நியமன ஆணை கல்வி அதிகாரி உட்பட ஐவர் கைது - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, September 27, 2020

போலி பணி நியமன ஆணை கல்வி அதிகாரி உட்பட ஐவர் கைது

 போலி பணி நியமன ஆணை  கல்வி அதிகாரி உட்பட ஐவர் கைது


போலி பணி நியமன ஆணை தயாரித்து, பணி நியமனம் வழங்கிய, ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப் ~ ~4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளிக்கல்வித் துறையில் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில், 43 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்., 17 மற்றும் 18ல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது. 37 இடங்கள் நிரப்பப்பட்டன. ஆறு இடங்கள் காலியாக இருந்தன.


மண்டபம் கல்வி மாவட்டம், சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு காலி இடங்களில், சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மற்றொரு பணியிடத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ், 32, சேர்ந்தார். ராஜேஷின் பணி நியமன ஆணை மீது, சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஆய்வு செய்த போது, அது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியிடம் தெரிவித்தார்.


அவர், எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., திருமலை விசாரித்தார்.


இதையடுத்து, போலி பணி நியமன ஆணை தயாரித்த, முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன், ராஜேஷ், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், உதவியாளராக பணியாற்றும் கேசவன், 45, பாம்பன் பள்ளியில் சேர்ந்த கலைவாணன், 26, கரையூர் பள்ளியில் சேர்ந்த சதீஷ்குமார், 33, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் பள்ளியில் பணியில் சேர்ந்த, மனோஜ் என்பவர் தலைமறைவானார். அவரை தேடி வருகின்றனர்.தயாரித்தது எப்படி?


உண்மையான பணி நியமன ஆணையில், பெயரை மட்டும் பேப்பர் வைத்து மறைத்து, வேறு பெயரை சேர்த்துள்ளனர்.


 டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பட்டியலில் பெயர் இல்லா விட்டாலும், முதன்மைக் கல்வி அலுவலரின் பணி நியமன ஆணை உத்தரவின் மூலம், ஆவணங்களை திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளனர். 


இதற்காக, பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. 'இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால், பல முறைகேடு வெளிச்சத்திற்கு வரலாம்' என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment