தன்னம்பிக்கை கருத்துகளால் பளிச்சிடும் அரசுப் பள்ளி சுற்றுச்சுவர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 19, 2020

தன்னம்பிக்கை கருத்துகளால் பளிச்சிடும் அரசுப் பள்ளி சுற்றுச்சுவர்கள்

 தன்னம்பிக்கை கருத்துகளால் பளிச்சிடும் அரசுப் பள்ளி சுற்றுச்சுவர்கள்


தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதி அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்களை சுத்தமாக பராமரிக்கும் வகையில் தலைவர்களின் படங்களை வரைய தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


தற்போது கரோனா ஊரடங்கால் அரசுப் பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் பள்ளி வளாகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகள் பொலிவிழந்து காணப்படுகின்றன. இதை மாற்ற பள்ளிச் சுவர்களில் வண்ணம் பூசுவது, தலைவர்களின் படங்களை வரைவது, அவர்களது கருத்துகளை எழுதுவது உள்ளிட்ட செயல்களை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனால் திருவள்ளுவர், இயற்கை விவசாயி நம்மாழ்வார், விவேகானந்தர், அப்துல்கலாம், பகத்சிங் உள்ளிட்ட பலரது உருவங்களும் அரசுப் பள்ளி சுவர்களில் பளிச்சிடுகின்றன.


கம்பம் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஜி. பாண்டியன் தலைமையில் படம் வரையும் பணி நடைபெறுகிறது. நன்செய் தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பசுமைசெந்தில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.


 தன்னார்வலர்கள் செல்வக்குமார், பாலா, பெரோஸ்கான், கார்த்திக், மனோஜ், சித்திக், ஜெகதீஸ்வரன், தேனிபாண்டி உள்ளிட்ட பலரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


அம்மாபட்டி அரசு தொடக்கப் பள்ளி, கோகிலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே.கே.பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.


இது குறித்து செந்தில் கூறுகையில், அரசுப் பள்ளியின் தோற்றத்தை மெருகேற்றும் வகையில், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செயல்பட்டு வருகிறோம்.


 மேலும் பள்ளியை இயற்கைச் சூழலுக்கு மாற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம் என்றார்.


ஓவிய ஆசிரியர் பாண்டியன் கூறுகையில், தன்னார்வலர்கள் சுவருக்கு பிரைமர் அடித்தல், பெயின்ட் அடித்தல் போன்ற பணிகளைச் செய்வர். தலைவர்களின் ஓவியங்களை மட்டும் நான் வரைவேன். சேவை நோக்கிலேயே இதைச் செய்வதால் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment