பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் பழனிசாமி விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 29, 2020

பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் பழனிசாமி விளக்கம்

 பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் பழனிசாமி விளக்கம்


தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மேலும், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.


மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.


முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment