'ஆசிரியர் பணியை ஊக்குவிக்கும் நல்லாசிரியர் விருது!' கல்வி சேவை குறித்து ஆசிரியர்கள் பெருமிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

'ஆசிரியர் பணியை ஊக்குவிக்கும் நல்லாசிரியர் விருது!' கல்வி சேவை குறித்து ஆசிரியர்கள் பெருமிதம்

 'ஆசிரியர் பணியை ஊக்குவிக்கும் நல்லாசிரியர் விருது!' கல்வி சேவை குறித்து ஆசிரியர்கள்  பெருமிதம்


ஆசிரியர்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர் விருது) ஆண்டுதோறும், ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படுகிறது.


பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் கருத்து:ஆசிரியர்களுக்கு பொறுப்பு அதிகம்!விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. 'கடமையை செய் பலனை எதிர்பாராதே,' என, பணியாற்றினேன். எனது பணிக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் கொடுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால், சிறப்பாக பணியாற்ற முடிந்தது. மேலும், ஊக்கத்துடன் பணியாற்ற இந்த விருது உத்வேகம் கொடுத்துள்ளது.

மாணவர்களை நல்வழிப்படுத்துவதுடன், ஆசிரியர்கள் சமூக பொறுப்பையும் உணர்ந்து பணியாற்றினால், விருதுகள் கட்டாயம் கைகூடும்.சொர்ணமணி, தலைமையாசிரியர்,மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.ஆசிரியர் பணிக்கு அங்கீகாரம்!கடந்த, 28 ஆண்டுகளாக, 'ஆசிரியர் பணி அறப்பணி' என, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். விருது பெற்றது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலுடன், சமுதாய பொறுப்புணர்வுகளையும், இந்தியாவின் வருங்கால துாண்கள் மாணவர்கள் என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைத்து, கல்வி போதித்து வருகிறேன். எனது பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையாக உள்ளது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் விருது பெற உதவியாக இருந்தது.சகுந்தலாமணி, தலைமையாசிரியர்,நாச்சியார் வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.


விருதால் மகிழ்ச்சி!

கடந்த, 31 ஆண்டுகளாக ஆசிரியர் பணியாற்றுகிறேன். ஒரு நாள் கூட பள்ளிக்கு தாமதமாக சென்றதில்லை. மாணவர்களிடம், நேர்மையை கடைபிடிப்பதை வலியுறுத்துவேன். பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்வே எனக்கு கிடைத்த விருதாகும். எனது பணிக்கு, அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. சக ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுத்ததால் பணியை சிறப்பாக செய்ய முடிந்தது. மிகப்பெரிய சவால் இனிமேல் தான் உள்ளது. இதுவரை வீட்டில் இருந்த மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து பாடம் நடத்துவது சவாலாக இருக்கும்.பரிமளம், தலைமையாசிரியர்,குப்பாண்ட கவுண்டர் ஆரம்ப பள்ளி.

பணிக்கான அடையாளமே விருது!

மாணவர்களுக்கு, கல்வியோடு, சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறேன். இன்றைய சூழல்நிலைக்கு ஏற்ப, நவீன யுக்திகளை பயன்படுத்தி பாடம் எடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு சேர்ப்பது, ஆய்வகங்களை முழுமையாக பயன்படுத்த கற்றுத்தருவது என, ஒவ்வொரு செயல்பாட்டிலும் நுாறு சதவீத ஈடுபாட்டுடன் பணிசெய்ததற்கான அடையாளம் தான் இந்த விருது.சுப்ரமணி, முதுநிலை விரிவுரையாளர்,திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.

அடுத்த கட்டத்துக்கு ஆயத்தம்!

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் தனித்திறன்களையும் ஊக்குவிப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு உள்ளது. நாள்தோறும், பள்ளி நேரம் முடிந்த பின், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பணிகளில் ஈடுபடுவது, என சமூக சேவைப்பணிகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறோம். இந்த விருது, எங்கள் பணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கான ஊக்குவிப்பாக கருதுகிறேன்.சுப்ரமணியம், வேதியியல் ஆசிரியர்,எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி.

ஊக்குவித்த 'தினமலர்'!

நல்லாசிரியர் விருது பெற்றது பணிக்கான சிறந்த அங்கீகாரம். 'தினமலர் சார்பில்' ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில், 2013ம் ஆண்டு, லட்சிய ஆசிரியர் விருது வழங்க துவங்கினர். முதல் ஆண்டிலேயே, லட்சிய ஆசிரியர் விருது பெற்றது தான், தற்போது நல்லாசிரியர் விருது பெறுவதற்கான முதல்படி. இவ்வாறு விருதுகள் வழங்குவதன் மூலம், மாணவர்களை, வழிநடத்துவதில், ஆசிரியர்களின் பொறுப்பு அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது.அன்புசெல்வன், அறிவியல் ஆசிரியர்,பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி.

மாணவர்கள் உயர்வே விருது!

மாணவியரை, கலை இலக்கிய செயல்பாடுகளில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வரை, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தும் தொடர்ந்து பயிற்சி அளித்தும் வருகிறோம். மன தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துகிறோம். ஆசிரியர் பணியை தொடர்ந்து செய்வதோடு, எங்கள் கண்முன்னே மாணவர்கள், சிறந்த நிலைக்கு செல்வது தான் ஆசிரியர்களுக்கான விருது.விஜயலட்சுமி, புவியியல் ஆசிரியர்,பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

மாணவர்கள் மீதே கவனம்!

மாணவர்களின் கல்வி சிறப்பாவதற்கு, படிக்கும் சூழலும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான், பள்ளியின் கட்டமைப்பை, அனைத்தும் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். பொருளாதார சூழலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் பெற்றோருக்கும், வேலைவாய்ப்பு அமைத்து தருகிறோம். எங்கள் பள்ளியை மாணவர்களின் விருப்பப்பள்ளியாகவும் முன்மாதிரியாக மாற்றுவதில் தா

ன் முழு கவனமும் உள்ளது. விரைவில் இந்த முயற்சியும் வெற்றிபெறும். இந்த விருது அதற்கான ஒரு அடையாளம் தான்.சவுந்தரராஜன், தலைமையாசிரியர்,காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி.

No comments:

Post a Comment