பட்டதாரிகள் சுயதொழில் துவங்க வேண்டும்: முதல்வர் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

பட்டதாரிகள் சுயதொழில் துவங்க வேண்டும்: முதல்வர்

 பட்டதாரிகள் சுயதொழில் துவங்க வேண்டும்: முதல்வர்'பட்டம் பெற்று, வெளியில் வருவோர், சுய தொழில் துவங்க, முனைப்பு காட்ட வேண்டும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்தார்.சத்தியபாமா நிகர்நிலை பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.


'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்த விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:கல்வி சேவையை, சத்தியபாமா நிகர்நிலை பல்கலை சிறப்பாக செய்வதால் தான், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள், கல்வி கற்க வருகின்றனர்.இந்த பல்கலை, இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து, துணைக்கோள் ஒன்றை, விண்ணில் செலுத்தியது, பல்கலையின் தனித்துவத்தை பறைசாற்றுகிறது.


பட்டம் பெறும், 3,190 இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற உள்ள, 129 ஆராய்ச்சி அறிஞர்களுக்கும், தங்கப்பதக்கம் வென்ற, 20 மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.ஜெயலலிதா அரசு, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


இந்தியாவில், உயர்கல்வியில் சிறந்து விளங்கும், முன்னோடி மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில், தமிழகம் முன்னணியில் உள்ளது.கடந்த கல்வியாண்டில், 14 பல்கலை உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக, மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 


2011 ~~ 12ம் ஆண்டு முதல் இதுவரை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 1,577 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.உயர்கல்வி தர வரிசை பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள, முதல், 100 பல்கலைகளில், தமிழகத்தை சேர்ந்த, 18 பல்கலைகள். முதல், 100 பொறியியல் கல்லுாரிகளில், தமிழகத்தை சேர்ந்த, 18 பொறியியல் கல்லுாரிகள்; முதல் 100 கலை, அறிவியல் கல்லுாரிகளில், 32 கல்லுாரிகள், இடம் பெற்று சாதனை படைத்து உள்ளன. தமிழகத்தில், அமைதியான சூழ்நிலை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளம் அதிகமாக உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க, அதிக அளவில் முன் வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


சுய தொழில் துவங்கு வோருக்கு, தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. பட்டம் பெற்று வெளியில் வருவோர், சுய தொழில் துவங்க, முனைப்பு காட்ட வேண்டும்.


இவ்வாறு, முதல்வர் பேசினார்.


விழாவில், பல்கலை வேந்தர் மரியஜீனா ஜான்சன், சிறப்பு விருந்தினர் மரிய ஜான்சன், துணைவேந்தர் சசிபிரபா, கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அருண்குமார் பாதுரி, பதிவாளர் ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment