இடமாறுதல், பதவி உயர்வுக்கு 10 ஆண்டாக காத்திருக்கும் சத்துணவு பணியாளர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 10, 2020

இடமாறுதல், பதவி உயர்வுக்கு 10 ஆண்டாக காத்திருக்கும் சத்துணவு பணியாளர்கள்

 இடமாறுதல், பதவி உயர்வுக்கு 10 ஆண்டாக காத்திருக்கும் சத்துணவு பணியாளர்கள்


தமிழகம் முழுவதும் கடந்த பத்து ஆண்டாக பதவி உயர்வு, இடமாறுதலுக்காக 45 ஆயிரம் சத்துணவு பணியாளர்கள் காத்திருக்கின்றனர். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தங்கவேலன் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் கடந்த மாதம் சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 45 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப அழைப்பாணை அனுப்பப்பட்டு, நேர்முக தேர்வுக்கான கடிதம் வழங்கப்பட்டது


ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக, காலி பணியிடம் நிரப்புவதை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டது.


 ஏற்கெனவே மூன்று முறை சத்துணவு மைய காலிப் பணியிடங்கள் நிரப்பும் தருவாயில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பெண்கள் அலைகழிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


ஏற்கெனவே, சத்துணவு மையங்களில் பணியாற்றி வருபவர்கள் பத்தாண்டுகளாக பதவி உயர்வு, இடமாறுதலுக்காக காத்திருக்கின்றனர். 


அவர்களுக்கு முன்னுரிமை அளித்த பின்னர் சத்துணவு மையங்களில் புதிய காலிப் பணியிடம் தோற்றுவித்து, அதற்கு பின்னரே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தங்கவேலன் கூறியது:


தமிழகம் முழுவதும் அரசு, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 45 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன.


இதில் 40 ஆயிரம் பணியாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களில் உணவு வழங்கும் பணியில், சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக உதவியாளர்கள், சமையலராகவும், சமையலர்கள், சத்துணவு அமைப்பாளராகவும் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கின்றனர். 


சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவுக்குள் பணியாளர்கள் வசிக்க வேண்டும் என்ற விதி முறை இருந்தாலும், பல பணியாளர்கள் 20 முதல் 30 கி.மீ., தொலைவுகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சென்று பணியாற்றிடும் நிலையில் உள்ளனர். இவர்கள் இடமாறுதல் கேட்டும் வழங்கப்படாமல் அரசு மவுனம் காத்து வருகிறது.


இதுபோன்ற சூழ்நிலை யில், ஏற்கெனவே, சத்துணவு மையங்களில் பணியாற்று பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பத்து ஆண்டுக்கு மேலாக பதவி உயர்வு, இடமாறுதலுக்கு காத்திருப்பவர்களின் கோரிக் கையை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம். அதன்பின்னரே, சத்துணைவு மையங்களில் புதிய காலிப்பணியிடம் தோற்றுவித்து, அப்பணியிடங்களுக்கு நிரப்ப வேண்டும். இக்கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

1 comment: