கோவை அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு
கோவை அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரி, கடந்த 1852-ம் ஆண்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளியாக முதலில் தொடங்கப்பட்டு, 1868-ல் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1919-ல் அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு, 1987-ம் ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்பட்டு வருகிறது
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னாட்சி அந்தஸ்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் தன்னாட்சித் தகுதி நீட்டிப்புக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிகளின் அடிப்படையில் நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.
இதன்படி ஹைதராபாத் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.சுரேஷ்குமார் தலைமையில், கொச்சி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.கிரீஷ்குமார், புனே பி.எம். கல்லூரி முதல்வர் சி.என்.ரவால், பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ரமேஷ், கல்லூரிக் கல்வி இயக்குநரகக் கோவை மண்டல முன்னாள் இணை இயக்குநர் எஸ்.கலா, பல்கலைக்கழக மானியக் குழு தனிச் செயலர் நந்த் கிஷோர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்
அதன் அடிப்படையில் கோவை அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக, பல்கலைக்கழக மானியக்குழு இணைச் செயலர் விகாஷ் குப்தா, பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் க.சித்ரா கூறியதாவது:
''இக்கல்லூரியில் 24 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 21 முதுநிலைப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 15 பாடப்பிரிவுகளில் எம்ஃபில்., பிஎச்.டி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 5,341 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 277 பேராசிரிய, பேராசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
தொழில் வளர்ச்சிக்கேற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றியமைத்தல், தேர்வு நடத்துதல் மற்றும் அதன் முடிவுகளை அறிவித்தல், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியைப் பெற்று கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றுக்குத் தன்னாட்சி அந்தஸ்து அவசியமாகிறது.
இதேபோல் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்ள தன்னாட்சி நிதியுதவியைப் பெறவும் உதவுகிறது. தற்போது தன்னாட்சி அந்தஸ்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் என அனைவருக்கும் பெருமையளிப்பதாகும்
இக்கல்லூரியானது ஏற்கெனவே 'நாக்' எனப்படும் தேசியத் தர நிர்ணயக்குழுவால் 'ஏ' கிரேடு தகுதி பெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த ஆண்டு வெளியிட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் 34-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது''.
இவ்வாறு சித்ரா கூறினார்.

No comments:
Post a Comment