மாணவர்களுக்குக் கரோனா தொற்று: பள்ளிகளை மூட முடிவு: நவம்பர் 9 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 24, 2020

மாணவர்களுக்குக் கரோனா தொற்று: பள்ளிகளை மூட முடிவு: நவம்பர் 9 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

 மாணவர்களுக்குக் கரோனா தொற்று:  பள்ளிகளை மூட முடிவு: நவம்பர் 9 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்


மிசோரத்தில் 12 மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன.


 இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.


இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. மிசோரம் மாநிலத்தில் அக்.16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன.


ஆனால், அதே நாளில் வடக்குப் பகுதி மிசோரத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளி மாணவர்கள் இருவருக்குக் கோவிட்-19 தொற்று உறுதியானது. அக்.18-ம் தேதி தெற்கு மிசோரத்தின் லாங்க்ட்லாய் நகரத்தில் இரண்டு மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


 அதே நாளில் செமாபாக் பகுதியில் உள்ள எபினேசர் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கும் விடுதிக் காப்பாளர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டது.


இந்நிலையில் மிசோரம் பள்ளிக் கல்வித்துறை, மூத்த கல்வித்துறை அதிகாரிகளுடனும் ஆசிரியர் சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தியது.


ஆலோசனைக்குப் பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் லால்சந்தமா ரால்டே, ''மிசோரத்தில் இயங்கி வந்த அனைத்துப் பள்ளிகளையும் திங்கட்கிழமை (அக்.26) முதல் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்.


பெருந்தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் மீண்டும் நவம்பர் 9-ம் தேதி முதல் பள்ளிகள், விடுதிகள் திறக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment