B.E, B.Tech படிப்புகளில் வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம்; 50% கட்டணச் சலுகை
வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.இ., பிடெக். படிப்புகளில் சேர இடம் கிடைத்ததுடன் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட வனப்பகுதியையொட்டி வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தலைசிறந்த அரசுப் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று. பழங்குடியினர், ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் படிக்கும் பள்ளி இதுவாகும். தொடர்ந்து 8 முறை 10-ம் வகுப்பிலும், 10 முறை 12-ம் வகுப்பிலும் 100 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது இப்பள்ளி.
அத்துடன் தேசிய வருவாய் வழித்தேர்வில் 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் என்ஐடி, எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு 4 மாணவர்களுக்குப் பொறியியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.பெள்ளி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
''எங்கள் பள்ளியில் படித்த தலா இரு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு, தலைசிறந்த இரு கல்லூரிகளின் பொறியியல் படிப்புகளில் மேலாண்மை இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.
இதன்படி பிளஸ் 2 வகுப்பில் 509 மதிப்பெண் பெற்ற மாணவி பி.ஹரிபிரியாவுக்கு, விஐடி கல்லூரியில் பி.டெக். படிப்பிலும், கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.ரம்யாவுக்கு (421 மதிப்பெண்) எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எம்.ஹரிசங்கருக்கு (478 மதிப்பெண்) மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிலும், ஆர்.விஷ்ணுவர்த்தனுக்கு (439 மதிப்பெண்) ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படிப்பிலும் இடம் கிடைத்துள்ளது. மேலும் இவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீதச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது
இதேபோல் விஷ்ணுவர்தன், ரம்யா, சஞ்சிதா, பிரிஸ்கா ஆகிய 4 மாணவர்கள் நீட் தேர்வெழுதி முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். மாணவி சஞ்சிதா ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்து வரும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் ஒன்றாக உள்ளது''.
இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.

No comments:
Post a Comment