கட்டாய கல்வியில் காலியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டிய 25 சதவீத இடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு, அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணை: தனியார் பள்ளி களில் உள்ள 25% இடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்.
இந்த சேர்க்கை, தொடர்பாக அக்டோபர் 10ம் தேதி அனைத்து தனியார் பள்ளிகளிலும் காலி இடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் இணைய தளத்திலும் அறிவிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் 12ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற வேண்டும். விண்ணப்பங்கள் பெற்ற பிறகு, தகுதியுள்ளவர்கள், தகுதியற்றவர் விவரங்களையும் நவம்பர் 11ம் தேதி வெளியிட வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கும் அதிகமாக இருந்தால் நவம்பர் 12ம் தேதி ரேண்டம் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மேலும், அன்றே தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள், விண்ணப்ப எண்களுடன் பள்ளிக் கல்வித்துறை இணைய தளம் மற்றும் பள்ளிஅறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையை முடித்த பிறகு, சேர்க்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான விவரங்களை நவம்பர் 15ம் தேதி அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

No comments:
Post a Comment