படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலை; நம்பிக்கையை கைவிடவில்லை: கர்ச்சீப் விற்கிறார் கம்ப்யூட்டர் இன்ஜினியர் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 25, 2020

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலை; நம்பிக்கையை கைவிடவில்லை: கர்ச்சீப் விற்கிறார் கம்ப்யூட்டர் இன்ஜினியர்

 படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலை; நம்பிக்கையை  கைவிடவில்லை:  கர்ச்சீப்  விற்கிறார்  கம்ப்யூட்டர் இன்ஜினியர்


கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி பெண் ஷோபனா, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்றெல்லாம், ஸ்தம்பித்து நின்று விடவில்லை. கர்ச்சீப் விற்பனையை கையில் எடுத்தார்; இன்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கிறார்.


படிப்பு செலவுக்கு வாங்கிய கடனை கூட, திருப்பி செலுத்த முடியாமல் தவித்த ஷோபனாவுக்கு, இன்று கர்ச்சீப் வியாபாரம் தான் கை கொடுக்கிறது. கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வரும் இவர், பலமுறை போட்டி தேர்வுகள் எழுதியும் வேலை கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களில் வேலை செய்தும் போதிய சம்பளம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஷோபனா தளரவில்லை. காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டின் ஓரத்தில், கர்ச்சீப் வியாபாரம் செய்து ஜம்மென்று சம்பாதித்து வருகிறார்.''நான் பள்ளியில் படிக்கும் போதே, அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். பொம்மை விற்றுதான் என்னையும், என் தம்பியையும் அம்மா படிக்க வைத்தார். அப்பா வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வீட்டை விற்று விட்டோம். இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறோம்,'' என்கிறார் ஷோபனா.


''ஏன்...வேறு வேலை கிடைக்கவில்லையா?'' என்ற நம் கேள்விக்கு, 


''தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போனேன். 6000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கவில்லை. அதை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை,'' ''எனக்கும் அடிக்கடி உடம்புக்கு சரியில்லாமல் போய் விடுகிறது. அதனால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை. என் படிப்பு செலவுக்கு வாங்கிய கடனை கூட, திருப்பி அடைக்க முடிவில்லை. அம்மாவுக்கும் வயதாகி விட்டது. அவர்களால் பொம்மை வியாபாரம் செய்ய முடியவில்லை. அதனால் நான் கர்ச்சீப் வியாபாரத்தில் இறங்கி விட்டேன்,'' என்கிறார்.


''வருமானமெல்லாம் எப்படி...?''


''இதில் ஒருநாளைக்கு, 500 ரூபாய் கிடைக்கும். அதை வைத்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என, காத்திருந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும். அதனால் கிடைத்த வேலையை செய்து, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்!

No comments:

Post a Comment