சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள்
தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் குறுகிய காலத்தில் சான்றுகள் வாங்க முடியாததால் சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் தவித்தனர். இதனால் காலநீட்டிப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு மையயங்களில் காலியாக உள்ள 184 அமைப்பாளர், 442 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
இதற்கான விண்ணப்பங்கள் செப்.25 முதல் அக்.3-ம் தேதி வரை பெறப்படும் என, 2 நாட்கள் தாமதமாக செப்.27-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் விண்ணப்பத்துடன் இருப்பிடம், சாதி, வருமானம், விதவை கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சான்றுகளை இணைக்கப்பட வேண்டும்.
இச்சான்றுகளை ‘இ-சேவை’ மையங்கள் மூலமே விண்ணப்பித்து பெற முடியும். மேலும் சர்வர் பிரச்சனை, அதிக கூட்டம் போன்ற காரணங்களால் ‘இ-சேவை’ மையங்களில் பல மணி நேரம் காத்திருந்து விண்ணப்பித்தனர். மேலும் சான்றுகளுக்கு விண்ணப்பித்தாலும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்த பிறகே சான்று வழங்கப்படுகின்றன.
இதனால் பலரும் சான்றுகளை பெற முடியவியல்லை. இந்நிலையில் நேற்றுடன் காலக்கெடு முடிந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் பலர், தவித்து வருகின்றனர். இதனால் விண்ணப்பம் பெறுவதை காலநீட்டிப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், ‘ விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 4 நாட்கள் விடுமுறையாகி விட்டது.
அறிவிப்பும் 2 நாட்கள் தாமதமாகவே வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர்களையும் சந்திக்க முடியாததால் சான்றிதழ்கள் வாங்க முடியவில்லை. இதனால் எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. காலநீட்டிப்பு செய்தால் பயனாக இருக்கும், என்று கூறினர்.
No comments:
Post a Comment