காமராசர் பல்கலை. விடைத்தாள் முறைகேடு; தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வழங்க நடவடிக்கை: துணைவேந்தர் தகவல்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

காமராசர் பல்கலை. விடைத்தாள் முறைகேடு; தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வழங்க நடவடிக்கை: துணைவேந்தர் தகவல் 

 காமராசர் பல்கலை. விடைத்தாள் முறைகேடு; தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வழங்க நடவடிக்கை: துணைவேந்தர் தகவல் 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் முறைகேடு தொடர்பாகத் தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் கடந்த நவம்பரில் பருவத் தேர்வை நடத்தியது. 


இத்தேர்வை சுமார் ஒரு லட்சம் பேர் வரை எழுதினர். பல்வேறு மையங்கள் மூலம் இதற்கான விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.


பொது முடக்கம் காரணமாக விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஓரிரு மாதங்களுக்கு முன், அந்த விடைத்தாள்களைத் திருத்த ஆய்வு செய்தபோது, கேரளாவில் இருந்து வந்த குறிப்பிட்ட சில மையங்களின் விடைத்தாள்களில் கூடுதல் பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


 இதன்பின், ஒரு லட்சம் விடைத்தாள்களையும் ஆய்வு செய்ய பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில் சிண்டிகேட் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.


 இக்குழுவின் ஆய்வில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விடைத்தாள்களில் கூடுதல் பக்கங்கள் சேர்க்கப்பட்டு இருப்பது தெரிந்தது.


இதன்படி, திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு உட்பட கேரளாவிலுள்ள 5 மையங்கள் மூலமாக இந்த முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பிற விடைத்தாள்களும் திருத்தாமல் வைக்கப்பட்டன.


 இதற்கிடையில் சிண்டிகேட் குழு பல்கலை. நிர்வாகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில், முறைகேடு தொடர்பாக பல்கலைத் தேர்வுத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள், அலுவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், இந்த முறைகேடு குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி போன்ற புலனாய்வு ஏஜென்சி ஒன்று விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.


இந்நிலையில் நவம்பருக்கான தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவு , ஏப்ரலில் வெளிவர வேண்டிய முடிவு என இரண்டும் இன்னும் வெளிவராத சூழலில் தேர்வெழுதிய பலரும் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. 


இப்புகாரைத் தொடர்ந்து முறைகேடு விடைத்தாள்கள் தவிர எஞ்சிய விடைத்தாள்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பல்கலை. நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்துப் பல்கலை. துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறுகையில், ''விடைத்தாள்கள் முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கை சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்று, புலனாய்வு ஏஜென்சி ஒன்று விசாரிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


மேலும், இதுகுறித்த அறிக்கை ஆளுநருக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்.


தவறு செய்யாதவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும். இதற்காக சிறப்புக் கமிட்டி ஒன்று 3 நாட்களில் அமைக்கப்படும். அதில் ஒப்புதல் பெற்று, புகாரில் சிக்காத விடைத்தாள்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment