பள்ளிகள் திறப்பு: கர்நாடக அரசு நிபுணர்களிடம் கருத்துக் கேட்பு
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நிபுணர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அக்.15-ம் தேதி முதல், பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் திறப்பதில் நிறைய சவால்கள் உள்ளன.
வீட்டிலேயே இருந்து பழகிவிட்ட மாணவர்களின் மனநிலையைத் தயார்படுத்த வேண்டும். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
இதை மேற்கொள்ள மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். அதேபோல நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரோனா சூழல் குறித்து சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் இயக்குநருடன், சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment