பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கக் கூடாது: சென்னை ஐகோர்ட் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்

 பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கக் கூடாது: சென்னை ஐகோர்ட்


ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்  பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க ஏதுவாக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர் என்று சான்றிதழ் வழங்க கோரி சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பூர்வி, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். 


ஆனால், ஆண்டு வருமானம் 8 லட்சம் என்ற காரணம் காட்டி அவரது விண்ணப்பத்தை தாசில்தார் நிராகரித்தார், இதை எதிர்த்தும் தனக்கு சான்று வழங்க உத்தரவிடக் கோரி பூர்வி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், கடந்த ஆண்டு சான்றிதழ் பெற்ற போதும், தாய் மரணம் காரணமாக மேற்படிப்பில் சேர முடியவில்லை. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஓராண்டுக்கு மருத்துவராக சேர்ந்தேன். தாய் மரணத்துக்கு பின், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த தந்தை வேலைக்கு செல்லவில்லை.


 எனக்கு நடப்பாண்டு 6 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் மட்டுமே வருமானம் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கான வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்துள்ளார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, “ஆவணங்களில் இருந்து மனுதாரர் பொருளாதார ரீதியில் பின் தங்கியவருக்கான சான்று பெற தகுதி உள்ளதாக கூறி சான்று கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, புதிதாக சான்று வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்


மேலும்,  உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது தற்போது தீவிரமான பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. 


இது சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான மாணவர்கள், கல்வியில் வாய்ப்பை பெற முடியாத நிலையும், தகுதி பெற இயலாத மாணவர்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.


 ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு உயர் கல்வியில் வாய்ப்பு வழங்கும் நிலையில், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே, இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment