ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 13, 2020

ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய திட்டம்

 ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய திட்டம்


மத்திய அரசின் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை அரசு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது.


 அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்காக மின்னணு சான்று வழியாக தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான, ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.


எனினும், பெரும்பாலான மூத்த குடிமக்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், பலருக்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் ஆன்லைன் சான்றிதழை நிரப்புவதும், சமர்பிப்பதும் கடினமாக இருந்தது.


 இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தபால்துறையின் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து இந்த புதிய சேவையை தொடங்கி உள்ளன.


இந்த புதிய திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள் தங்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தபால் அலுவலகம் மூலமாக வீட்டில் இருந்தபடியே சமர்பிக்க முடியும். தபால்காரர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களிடம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் இருக்கும். அதன் மூலமாக, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் அங்கேயே பெற்றுத் தருவார்கள்.


 மேலும், ஓய்வூதியதாரரின் ஆயுள் சான்றிதழ் குறித்த விவரங்கள், ஓய்வூதிய துறையில் தானாகவே பதிவேற்றப்படும். ஓய்வூதியதார்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால், இந்த சேவைக்காக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.


 இந்த சேவையில் 1.36 லட்சம் தபால் நிலையங்கள், 1,89,000 தபால்காரர்கள் ஈடுபடுவார்கள்.

1 comment: