பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் நாடு முழுவதும் 330 பேர் பயன்பெற்ற நிலையில் தமிழகத்தில் பயனடைந்தது மாணவர்கள் மிக மிக குறைவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 27, 2020

பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் நாடு முழுவதும் 330 பேர் பயன்பெற்ற நிலையில் தமிழகத்தில் பயனடைந்தது மாணவர்கள் மிக மிக குறைவு

 பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் நாடு முழுவதும் 330 பேர் பயன்பெற்ற நிலையில் தமிழகத்தில் பயனடைந்தது  மாணவர்கள் மிக மிக குறைவு


ஆராய்ச்சி மாணவர்களுக்கு அதிக அளவில் உதவித் தொகை வழங்கும் பிரதமர் உதவித் தொகை திட்டத்தில் நாடு முழுவதும் 330 பேர் பயனடைந்துள்ள நிலையில், தமிழக மாணவர்கள் 3 பேர் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர். 25 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இருந்தும், அண்ணா, பாரதியார் பல்லைக்கழகங்கள் இதில் சேர்க்கப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


நாடு முழுவதும் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்க பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் (பிஎம்ஆர்எஃப்) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் தேர்வாகும் மாணவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக முதல் 2 ஆண்டுக்கு தலா ரூ.70 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ.75 ஆயிரம், 4, 5-ம் ஆண்டுகளில் தலா ரூ.80 ஆயிரம் வழங்கப்படும். மேலும், ஆராய்ச்சி செலவுக்காக ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.


தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் (என்ஐஆர்எஃப்) முதல் 25 இடங்களை பிடிக்கும் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமே இந்த உதவித் தொகையை பெற முடியும். தவிர, ஐஐடி, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (ஐஐஎஸ்இஆர்), இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றன. அதன்படி, 38 கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டால் உதவித் தொகை கிடைக்கும்.


பிஎம்ஆர்எஃப் திட்டத்தின் கீழ்ஆராய்ச்சி செய்வதற்கு ஐஐடி,ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ், என்ஐடி,மற்றும் மத்திய பல்கலைக்கழகங் களில் முதுநிலை பட்டம் பெற்ற மாணவர் ஒட்டுமொத்த கிரேடு புள்ளியின் சராசரி (சிஜிபிஏ) 8.5 ஆக இருந்தால் போதும். ஆனால், பிற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதுநிலையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிஜிபிஏ புள்ளி 8.5 என்பதோடு, 'கேட்' நுழைவுத் தேர்வில்குறைந்தபட்சம் 650 மதிப்பெண்ணும் பெற வேண்டும்.


இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் 330-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதில் தமிழக மாணவர்கள் 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்து யுஜிசி உயர் அதிகாரிகள் கூறியதாவது:


10 ஆண்டுகளாக அதிக நிதி


இந்தியாவில் ஆராய்ச்சி பயிலும்மாணவர்களுக்கு 15-க்கும் அதிகமான உதவித் தொகை திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளாகத்தான் அதிக நிதி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிஎம்ஆர்எஃப் திட்டத்தில் மாணவர்களுக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை கிடைக்கிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் சார்பாகவும் நிதி கிடைக்கும்.


ஆனால், நடப்பு ஆண்டில் 3 தமிழக மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் உதவித் தொகை பெறுகின்றனர். அவர்களும் சென்னை ஐஐடி மாணவர்கள்.


தமிழகத்தில் சென்னை ஐஐடி,திருச்சி என்ஐடியில் ஆராய்ச்சி மேற்கொண்டால் மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பிஎம்ஆர்எஃப் திட்டத்தின் கீழ் இன்னும் வரவில்லை. இதனால், தமிழகத்தில் இத்திட்டம் குறித்து அவ்வளவாக தெரியவில்லை.மேலும், பிற கல்வி நிறுவன மாணவர்கள் 'கேட்' தேர்வு எழுதவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் உள்ளன.


நாட்டிலேயே தமிழக மாணவர்கள்தான் ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபடுகின்றனர். எனவே, பிஎம்ஆர்எஃப் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆராய்ச்சி உதவித் தொகையை தமிழக மாணவர்கள் பலரும் பெற முடியும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


2018-19 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் பிஎம்ஆர்எஃப் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் திட்டத்தின் கீழ் வரும் கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.


தொடர்ந்து பரிசீலனை


அப்போது, என்ஐஆர்எஃப் பட்டியலில் முதல் 25 இடங்களில் இருக்கும் அண்ணா, பாரதியார் பல்கலைக்கழகங்களையும் இதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2020-21 கல்வி ஆண்டுக்கான பட்டியலிலும் இந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை. இதற்காக கோரிக்கை விடுத்தும், பரிசீலித்து வருவதாகவே யுஜிசி தொடர்ந்து கூறிவருகிறது என்று இந்த பல்கலைக்கழகங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment