பிரதமர் கொடுத்த அங்கீகாரம்: விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா நெகிழ்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 27, 2020

பிரதமர் கொடுத்த அங்கீகாரம்: விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா நெகிழ்ச்சி

 பிரதமர் கொடுத்த அங்கீகாரம்: விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா நெகிழ்ச்சி


என் உழைப்புக்கான அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா கூறியுள்ளார்.


தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்திவருகிறது.


இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான 53 பாடங்களை ‘பென் டிரைவ்’மூலம் மாணவர் சாகுல் அமீது மூலம் பதிவு செய்து இலவசமாக விழுப்புரம் அருகே செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ந.கி. ஹேமலதா வழங்கினார். இதுகுறித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டது.


இந்நிலையில் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது, ''கரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ( Animated video) இயங்குபடக் காணொலி வாயிலாக பென் டிரைவ் மூலம் ஆசிரியை ஹேமலதா பதிவு செய்து வழங்கினார். அவரைப் பாராட்டுகிறேன். இணையவழிக் கல்வி என்பது இச்சூழ்நிலையில் விலை மதிப்பில்லாதது. மேலும் சந்தேகங்களைத் தொலைபேசி மூலம் நிவர்த்தி செய்தார். 


இந்தப் படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் ‘தீக்‌ஷா’ தளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


இதுகுறித்து ஆசிரியை ஹேமலதாவிடம் கேட்டபோது, ''என் உழைப்புக்கான அங்கீகாரத்தை பிரதமர் கொடுத்துள்ளார்.


 நான் பணியாற்றும் பள்ளி உள்ள செ.குன்னத்தூருக்கு ஒரே ஒரு நகரப் பேருந்து சென்றுவருகிறது. இந்த அளவுக்கு நான் பணியாற்ற ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இதற்கிடையே விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஆசிரியை ஹேமலதாவின் வீட்டிற்குச் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment