பொதுத் தேர்வு எழுதக் கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

பொதுத் தேர்வு எழுதக் கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை

 பொதுத் தேர்வு எழுதக் கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் குறித்து வரும் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்த நிலையில், பொதுத் தேர்வுக்குத் தயாராகக் கூடுதல் அவகாசம் தேவை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், ஆன்லைன் மூலமாகப் பாடங்களைக் கற்று வருகின்றனர்.


அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன.


இதனால் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.


மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அதேபோல கடந்த 22-ம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் வெபினார் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், காகித முறையில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்றும் பிப்ரவரி மாதம் வரை தேர்வு தொடங்காது என்று தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையே பொதுத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பு குறித்து மாணவர்கள் தங்களின் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், ''ஏப்ரல் மாதம் வரை பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்'' என்று ஒரு மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மற்றொரு மாணவர், ''தேர்வுக்குத் தயாராகப் போதிய கால அவகாசம் தேவை என்பதால் மே - ஜூன் மாதங்களில் தேர்வை நடத்தலாம்'' என்று தெரிவித்துள்ளார்.


இன்னொரு மாணவர் கூறும்போது, ''பாடத்திட்டம் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பதால், மார்ச் வரை மட்டுமாவது தேர்வுகளைத் தள்ளி வையுங்கள்'' என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.


வழக்கமாக செய்முறைத் தேர்வுகள் ஜனவரி மாதமும், எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதத்திலும் முடியும். இதற்கிடையே பல்வேறு பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சிப் பொதுத் தேர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment