நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 20, 2020

நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல்

 நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல்


நாட்டுப்புறக் கலைகள் குறித்தும், அவற்றின் இன்றைய தேவை குறித்தும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, பண்ருட்டியில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நாட்டுப்புற மேடைக் கலைஞர்களின் எழுச்சி மாநாடு இன்று (டிச. 20) பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் அருகே நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை வகித்தார். பண்ருட்டி வணிக சங்கப் பிரமுகர் எஸ்விஎஸ் வைரக்கண்ணு முன்னிலை வகித்தார். 


மாநாட்டு மலரை அரி. கிருஷ்ணமூர்த்தி வெளியிட மத நல்லிணக்கத் தலைவர் கு.சுப்ரமணி பெற்றுக் கொண்டார்.


கூட்டத்தில், "தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சம் கலைஞர்களில் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்த சுமார் 34 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசின் நிவாரணத் தொகை கிடைத்தது.


 எஞ்சியவர்களை நிவாரணம் சென்றடையவில்லை. எனவே, விடுபட்டுள்ள அனைவரையும் நலவாரியத்தில் சேர்ப்பதற்குத் தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்" என வலியுறுத்தினர்.


தொடர்ந்து, நாட்டுப்புறக் கலையின் அவசியத்தையும், அவற்றின் தேவை குறித்தும் எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்,


 நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் ஓய்வூதியம் பெறுவற்கான வயது வரம்பைத் தளர்த்தி, பெண்களுக்கு 45, ஆண்களுக்கு 50 என நிர்ணயம் செய்ய வேண்டும், இளம் கலைஞர்களுக்கான விபத்துத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், நாட்டுப்புறக் கலைஞர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதம் ரூ.2,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment