கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 17, 2020

கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவு

 கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவு


கணினி ஆசிரியர் தேர்வில், மூன்று தேர்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆன்லைன்


தமிழக பள்ளி கல்வித் துறையில், 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 ஜூனில் நடத்தியது. இந்த பணியிடங்களுக்கு, 26 ஆயிரத்து, 882 நபர்கள் விண்ணப்பித்தனர்.


 தமிழகம் முழுதும், 119 மையங்களில், 'ஆன்லைன்' வாயிலாக தேர்வு நடந்தது. இதில், மூன்று மையங்களில் இணையதள சேவை கிடைக்காமல் தேர்வு தடைபட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு அறைக்குள், விண்ணப்பதாரர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், மூன்று மணி நேரத்திற்கு மேலாக, தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தேர்வு வாரியம் மீது குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து, இப்பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து, மறு தேர்வு நடத்தக்கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி உட்பட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் பிறப்பித்த உத்தரவு:மூன்று தேர்வு மையங்கள் தவிர, 116 மையங்களில் தேர்வு எழுதி, தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள, அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 


அதே நேரம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்; திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைத்த தேர்வு மையங்களில், முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது,


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் அமைக்க வேண்டும். இந்த கமிஷன், பிப்.,1ல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். 


அதற்கான வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment