வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய  கால அவகாசம் நீட்டிப்பு


தனிநபர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை 2021 ஜனவரி 10 தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2019~20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தனிநபர்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதியாகும். 


ஆனால் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் மக்களால் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.


இதையடுத்து மத்திய அரசு கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கடைசி நாள் நவம்பர் 30 என அறிவித்தது. பின் இந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31ம் தேதி என அறிவிக்கப்பட்டது.


இந்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் தனி நபர்கள் 2021 ஜனவரி 10ம் தேதி வரை தங்களுடைய கணக்கை தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இது மூன்றாவது நீட்டிப்பாகும்.அதே நேரத்தில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய அல்லது சர்வதேச நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பிற வரி செலுத்துவோர்களுக்கு வருமான வரி கணக்கை தாக்க செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் நிறுவனங்களுக்கும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வரி தணிக்கை அறிக்கையை வழங்குவதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.


இதுவரை...


டிச. 28 வரை 4.54 கோடி வருமான வரி கணக்கு படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அபராதம் இன்றி 5.65 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment